இந்தப் படத்தை தொடர்ந்து, ஹரிஷ் கல்யாண் அடுத்ததாக விஜய் தேவரகொண்டா நடித்த தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 2016ம் ஆண்டு தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ரீது வர்மா நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த படம் 'பெல்லி சூப்புலு'. ரொமான்டிக் காமெடியுடன் கூடிய இந்தப் படத்தை தருண் பாஸ்கர் இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கிய பிரபல இயக்குநர் கவுதம் மேனன், தானே தயாரிக்க திட்டமிட்டார். 

கடந்த 2017ம் ஆண்டு 'பொன் ஒன்று கண்டேன்' என்று அழகிய தலைப்புடன் தமிழ் ரீமேக்கை தொடங்கிய அவர், ஹீரோவாக விஷ்ணு விஷாலையும், ஹீரோயினாக தமன்னாவையும் ஒப்பந்தம் செய்தார். அத்துடன், தன்னிடம் இணை இயக்குனராக இருந்த செந்திலை இயக்குநராக அறிமுகம் செய்துவைத்து, 'பொன் ஒன்று கண்டேன்' படத்தின் டைட்டில் லுக்கையும் வெளியிட்டார்.  

அதன்பின்னர், கவுதம் மேனனுக்கு ஏற்பட்ட பண நெருக்கடி காரணமாக, படம் பொன் ஒன்றை காணாமலேயே கைவிடப்பட்டது.
 இந்த நிலையில், தற்போது 'பெல்லி சூப்புலு' படத்தின் ரீமேக் உரிமை கைமாறி, விஜய் தேவரகொண்டா கேரக்டரில் ஹரிஷ் கல்யாண் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும், இந்தப் படத்தின் மூலம் ஹரிஷ் கல்யாணின் நெருங்கிய நண்பர் கார்த்திக் இயக்குனராக அறிமுகமாகிறாராம். இந்தப் படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசை அமைக்க, கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.