மு.க.ஸ்டாலின் முதல் கமல்ஹாசன் வரை... அஜித்தின் தந்தை மறைவுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல்
நடிகர் அஜித்தின் தந்தை பி சுப்ரமணியம் இன்று காலை காலமான நிலையில், அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் அஜித்தின் தந்தை பி சுப்ரமணியம் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 85. கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் இன்று காலை மரணமடைந்தார். தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்துள்ளது. அஜித்தின் தந்தை மறைவுக்கு ரசிகர்களும், அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ள இரங்கல் பதிவில், “நடிகர் அஜித்குமார் அவர்களின் தந்தை சுப்பிரமணியம் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு வருந்தினேன். தந்தையின் பிரிவால் வாடும் அஜித்குமார் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... நடிகர் அஜித்தின் தந்தை பி.சுப்ரமணியம் காலமானார் - சோகத்தில் ரசிகர்கள்
இதேபோல் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பதிவிட்டுள்ள இரங்கல் பதிவில், “தன்னைத்தானே தகவமைத்து கொண்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், அன்புச்சகோதரர் திரு.அஜித்குமார் அவர்களின் தந்தை திரு.பி.சுப்ரமணியம் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன், தந்தையை இழந்து வாடும் திரு.அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
நடிகை காயத்ரி ரகுராம் பதிவிட்டுள்ளதாவது : “அஜித்குமார் சார் தந்தையின் மறைவுச் செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். அஜித் சாரின் குடும்பத்திற்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அஜித் சார் உலகத்திற்கே பெரிய ஹீரோ ஆனால் உங்கள் தந்தை உங்களுக்கு பெரிய ஹீரோ, தந்தையை இழப்பது கடினம், அவருடைய நினைவு நமக்கு பலம் தரும். ஓம் சாந்தி” என குறிப்பிட்டுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது : “அஜித்குமார் அவர்களின் தந்தை சுப்பிரமணியம் அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன். தந்தையின் பிரிவால் வாடும் அஜித்குமார் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த அன்புமணி ராமதாஸ் பதிவிட்டுள்ள இரங்கல் பதிவில், “தமிழ்த் திரைப்பட நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியன் அவர்கள் காலமானதை அறிந்து வருத்தமடைந்தேன். அவர் நல்ல மனிதர். அவரை இழந்து வாடும் நடிகர் அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
நடிகர் அஜீத்குமார் அவர்களின் அன்புத்தந்தையார் திரு.பி.எஸ்.மணி அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தியறிந்து வருந்தினேன். அஜீத் அவர்களின் இல்லத்துக்கு சென்று அவருடைய தந்தையாரின் திருவுடலுக்கு மரியாதை செலுத்தினோம்..குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தோம். என உதயநிதி ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கமல் பதிவிட்டுள்ள இரங்கல் பதிவில், “தம்பி அஜித்குமார் அவர்களின் அப்பா சுப்பிரமணியம் மறைந்த செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். தந்தையை இழந்து வாடும் அஜித் குமாருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... தந்தைக்கு என்ன ஆச்சு... திடீரென மரணமடைந்தது எப்படி? நடிகர் அஜித் வெளியிட்ட உருக்கமான அறிக்கை