’ரஜினிகாந்த படங்களில் நடிப்பதற்கு  இன்றளவும் கருப்புப் பணம் வாங்குகிறார். அதை ஒளித்துவைப்பதற்காக காஷ்மீர் பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசை ஆதரிக்கிறார்’என்று பிரபல அரசியல் பிரமுகர் வேல் முருகன் வெகுண்டெழுந்திருக்கிறார்.

துவக்கத்தில் மோடியின் பா.ஜ.க.அரசை அரசல்புரசலாக சப்போர்ட் பண்ணி வந்த சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் சமீபகாலமாக மிக வெளிப்படையாக பா.ஜ.க.அரசை ஆதரிப்பதுடன் அதற்கு எதிராகப் பேசுபவர்களையும் விமர்சிக்க ஆரம்பித்துள்ளார். ரஜினியின் அந்தப்போக்கைக்கண்டித்து நாம் தமிழர் சீமான், விசிகவின் திருமாவளவன் உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மயிலாடுதுறையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்,’டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் திட்டங்களான ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். மயிலாடு துறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். அணு உலை திட்டம் போன்ற பேரழிவு திட்டங்களுக்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சி தொடர்ந்து போராடும்.

காஷ்மீர் பிரச்சினையில் நடிகர் ரஜினிகாந்த் மத்திய அரசுக்கு சாதகமான பதிலை தெரிவித்துள்ளார். தான் நடிக்கும் படங்களில் வாங்கி வரும் பெரும் கருப்பு பணத்தை கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தான் மத்திய- மாநில அரசுகளுக்கு ஆதரவாக அவர் எப்போதும் குரல் கொடுத்து வருகிறார். தமிழக மக்கள் தான் அவரை பற்றி புரிந்து கொள்ள வேண்டும் ‘என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார் வேல்முருகன்.