தனது அலுவலகத்தில் வேலை செய்த செக்யூரிட்டி காவலர்கள் இருவருக்கு கடந்த நான்கு மாத காலமாக சம்பள பாக்கியைத் தராமல் இழுத்தடித்து வருவதாக’கோமாளி’நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மேனேஜர் மீது சென்னை, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள நடிகர் ஜெயம்ரவியின் அலுவலகத்துக்கு, தனியார் செக்யூரிட்டி அமைப்பைச் சேர்ந்த  துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் இருவர் பணிக்கு அமர்த்தப்பட்டனர்.  குறிப்பிட்ட காரணங்கள் எதுவும் சொல்லாமல் கடந்த ஏப்ரல் மாதம் அவர்கள் இருவரையும் திடீரென ஜெயம்ரவி வேலையில் இருந்து நிறுத்தி விட்டதாகக் கூறப்படுகிறது. அவர்கள் வேலையை விட்டு நின்றபோது 4 மாத சம்பள பாக்கி இருந்ததாகத் தெரிகிறது. அதுகுறித்து செக்யூரிட்டி நிறுவனத்துக்கு ஜெயம் ரவி தரப்பு எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை.

இந்நிலையில்  4 மாதங்களாகியும் சம்பள பாக்கி தராததால் அது குறித்து செக்யூரிட்டி நிறுவனத்தின் மேலாளர் வின்சென்ட் தேனாம்பேட்டை போலீசில் நேற்று புகார் அளித்துள்ளார்.இரண்டு பேருக்கு தரவேண்டிய சம்பளம் ரூ. 70 ஆயிரம் ரூபாயை தராமல் மோசடி செய்து விட்டதாக அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். புகார் நடிகர் ஜெயம் ரவியின் மேல் தரப்பட்டிருந்தாலும்  ஜெயம் ரவியின் மேலாளர் சேஷகிரியை விசாரணைக்கு வரும்படி போலீசார் அழைத்துள்ளனர்.