நடிகை ஓவியா நடித்துள்ள ‘90 எம்.எல்.’ படம் தமிழக இளம்பெண்கள், கல்லூரி மாணவ, மாணவிகளை கலாச்சாரத்துக்கு எதிராக செயல்படும் வகையில் தூண்டிவிடுவதால் அவரையும், அவரது தோழிகளாக நடித்தவர்களையும், பட இயக்குநர் அனீத் உதீப்பையும் கைது செய்யவேண்டும் என்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

 சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இந்திய தேசிய லீக் கட்சியின் மகளிர் அணி தலைவர் ஆரிபா ரசாக் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: சமீபத்தில் வெளியாகி உள்ள “90 எம்எல்” திரைப்படம்  தமிழ் மற்றும் இந்திய கலாச்சாரத்திற்கு எதிராக உள்ளது. படத்தில் இளம் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளை தங்களது கலாச்சாரத்திற்கு எதிராக செயல்பட தூண்டும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளன. குறிப்பாக, மது அருந்துவது, புகைப்பிடிப்பது, படுக்கை அறை ரகசியங்களை அம்பலப்படுத்தும் வகையில் பேசுவது, ஆபாச வசனங்கள் போன்றவை இப்படத்தில் அமைந்துள்ளது.

பாலியல் குற்றம் நடக்க ’90 எம்எல்’ திரைப்படம் தூண்டும் வகையில் உள்ளது. குற்றவாளிகளை உருவாக்குவது இதுபோன்ற திரைப்படங்கள்தான் என்று இந்திய தேசிய லீக் கட்சி கருதுகிறது. எனவே, இந்த திரைப்படத்தை தடை செய்து, திரைப்படத்தில் நடித்துள்ள நடிகைகள் ஓவியா, ரிட்டா, பொம்மூ லட்சுமி, தாமரை, கோபிகா, பாரு, மசூம்  சங்கர், காஜர், மொஹிசா ராம், சுகன்யா மற்றும் இயக்குநர் அனிதா உதிப் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.

படம் வெளியான இரண்டாவது நாளிலிருந்தே வசூல் டல்லடிக்கத் துவங்கியுள்ள நிலையில் இதுபோன்ற புகார்கள் படத்திற்கு அநாவசியமான பப்ளிசிட்டியாக அமைந்துவிடும் என்பதைத்தாண்டி இது போன்ற புகார்களால் எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை என்று திரையுலகினர் கருதுகின்றனர்.