செல்வராகவன், சூர்யா கூட்டணியின் ‘என்.ஜி.கே’படத்தின் துவக்க கால போஸ்டர் டிசைன்களில் கவிஞர் வைரமுத்து இடம்பெற்றிருந்த நிலையில் அவரைப் படத்தை விட்டுத் தூக்கியது ஏன் என்பது குறித்துப் பேசியிருக்கிறார் இயக்குநர் செல்வராகவன்.

நாளை மறுநாள் ரிலீஸாகவிருக்கும் ‘என் ஜி கே’ படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படம் துவக்கப்பட்ட சமயத்தில் படத்தின் அத்தனை பாடல்களையும் வைரமுத்து எழுதுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ரிலீஸ் சமயத்தில் அவர் பெயரில் ஒரு பாடல் கூட இல்லை.

முன்பு பெண்கள் விஷயத்தில் முதிர்ச்சியற்று இருந்த செல்வராகவன் சமீபத்தில் கூட தனது பழைய படத்தில்  ‘அடிடா அவள, முடிடா அவள, வெட்றா அவள’ என்று பாடல் எழுதியதற்காக மன்னிப்பும் கேட்டிருந்தார். இதே காரணத்துக்காகவே சின்மயி விவகாரத்தில் ‘மி டு’ விவகாரத்தில் வைரமுத்து சிக்கியதால் அவரை பாடல் எழுத செல்வா அழைக்கவில்லையென்றும், மி டு விவகாரத்தில் சிக்கியவர்களுடன் பணிபுரிவதில்லை என்ற சபதத்தின் ஒரு பகுதியாகவே வைரமுத்து படத்திலிருந்து நீக்கப்பட்டார் என்றும் செய்திகள் நடமாடின.

அது குறித்து இதுவரை எந்தக் கருத்தும் கூறாமல் இருந்த செல்வராகவன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வைரமுத்து நீக்கப்பட்டது குறித்து பதிலளித்தபோது, ‘அது தற்செயலாக நடந்தது. அவருக்குப் பதிலாக மற்றவர்களை வைத்துப் பாடல்களை முடித்துவிட்டோம். ஆனால் ‘மிடு’ சர்ச்சையில் சிக்கியவர்களுடன் பணிபுரிவதை நான் விரும்பவில்லை என்பதும் உண்மைதான் என்று தெரிவித்தார்.