பிரதமர் மோடி தனது எட்டாவது வயதிலிருந்தே தேசபக்தி கொண்டவராகத் திகழ்ந்தார் என்ற அரிய உண்மையைப் பேசும் ‘சலோ ஜீத்தே ஹை’ படம் நேற்று சத்யம் திரையரங்கில் பத்திரிகையாளர்களுக்காக திரையிடப்பட்டது.

 32 நிமிடம் நிமிடம் ஓடும் அப்பெரும் குறும்படத்தை மங்கேஷ் ஹடவாலே தயாரித்து இயக்கியிருக்கிறார். எட்டு வயதுப் பையனாக வரும் நரேந்திரரு அதில் ஒரே ஒரு காட்சியில் ஒருவருக்கு டீ சப்ளை செய்கிறார். அந்த வயதிலியே தேச பக்தி வெறிகொண்டு அலையும் அவர்,படத்தில் இடம்பெறும் ஒருவர் விடாமல், அனைவரும் நாட்டுக்காக வாழவேண்டும் என்ற நல்லெண்ணத்துடன்  ‘நீங்க யாருக்காக வாழுறீங்க’ என்று நச்சரித்து எடுக்கிறார்.

தன்னுடன் படிக்கும் சக மாணவன் ஒருவர் யூனிஃபார்ம் இல்லாததால் பள்ளிக்கு வரமுடியாமல் இருக்க, ‘மஞ்சள் மலர்’ என்னும் பக்தி நாடகத்தை எழுதி இயக்கி நடித்து அதில் இருபது ரூபாய் அன்பளிப்பு பெற்று அம்மாணவனுக்கு யூனிஃபார்ம் வாங்கித் தந்து பள்ளிக்கு வரவழைக்கிறார். ஆக சின்ன வயசில் ரொம்ப நல்லவராகவே இருந்திருக்கிறார் மோடி.

கண்ணா இது ட்ரெயிலர்தான். மெயின் பிக்சர் இதோ ரெடியாயிட்டிருக்கு என்று அடுத்து தயாராகும் படம் மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் ‘பிஎம் நரேந்திர மோடி’. அப்படத்தில், மோடி வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விவேக் ஓபராய். சந்தீப் சிங் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தை ஒமுங் குமார் இயக்குகிறார். பிரபல குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோம் வாழ்க்கை வரலாற்றை இயக்கி, தேசிய விருது பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 3 மாதங்களாக திரைக்கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்த படக்குழு, தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

வருகிற 7-ம் தேதி இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாக இருக்கிறது. மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இந்த ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுகிறார். 23 இந்திய மொழிகளில் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படுகிறது.

சாதாரண டீ விற்பவராக இருந்த மோடி, இந்தியாவின் பிரதமராக எப்படி ஆனார் என்பது இந்தப் படத்தில் சொல்லப்படுகிறது. படத்தில் ராகுல், சோனியா காந்திகள் இருக்கிறார்களா என்பது தெரியவில்லை.