பத்து ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த படம், முதல் காதல், முதல் முத்தம் என்று பல டாபிக்குகளில் பிரபல நடிகர் நடிகைகள் அவ்வப்போது வெளியிட்டு வரும் தகவல்களின் வரிசையில் தனது முதல்  பட சம்பளம் வெறும் 300 ரூபாய்தான் என ஒரு அதிர்ச்சி தகவலை நடிகை பியா பாஜ்பாய் வெளியிட்டுள்ளார்.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 2008ம் ஆண்டு வெளியான ’பொய் சொல்ல போறோம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பியா பாஜ்பாய். இதையடுத்து, அஜித்தின் ‘ஏகன்’, ஜீவா நடித்த ‘கோ’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.வெங்கட் பிரபு இயக்கத்தில் ஜெய் நடித்த ‘கோவா’ படத்தில் பியா பாஜ்பாய் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், 2012ம் ஆண்டு 'மாஸ்டர்ஸ்’ என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவுக்கு அறிமுகமானார். அத்துடன், சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், சமீபகாலமாக படவாய்ப்புகள் ஏதுமின்றி இருந்த பியா பாஜ்பாய் நேற்று  (6ம் தேதி) தனது ட்விட்டர் பக்கத்தில், “மும்பையில் எனது முதல் வேலை ஒருவருக்கு டப்பிங் பேசியதுதான். அதற்காக எனது முதல் சம்பளமாக ரூபாய் 300 பெற்றேன். உங்களின் முதல் சம்பளம் எவ்வளவு..?” என்று கேட்டுள்ளார். பியாவின் வெளிப்படையான தகவலுக்கு பாராட்டுக்களைக் குவித்துவரும் ரசிகர்கள் தங்களது முதல் சம்பள அனுபவத்தையும் அவரது ட்விட்டர் கமெண்டுக்குக் கீழே எழுதிக்குவித்துவருகின்றனர்.