பிரபல நடிகை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கும் கோடீஸ்வரி நிகழ்ச்சி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கடந்த டிசம்பர் 13ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஏராளமான பெண்கள் பங்கேற்று, விளையாடி பல லட்சம் ரூபாய் ஜெயித்துள்ளனர். அதன் மூலம் அவர்களுடைய நிறைவேறாத ஆசைகளும் நிறைவேறி உள்ளது. 

முதன் முதலாக மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணான கவுசல்யா என்பவர் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் பங்கேற்று ஒரு கோடி ரூபாய் வென்றுள்ளார். மதுரை நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வரும் கவுசல்யாவிற்கு, காது கேட்காது, வாய் பேசவும் முடியாது. அவருக்கு குரூப் 1 தேர்வு எழுதி உதவி ஆட்சியராக வர வேண்டும் என்பதே ஆசை. 

தனது சைகை மொழி மற்றும் திறமையால் ஹாட் சீட்டில் அமர்ந்து துணிச்சலாக விளையாடிய கவுசல்யா, பெண்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்.  காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கோடீஸ்வரி போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்று ஒரு கோடி வெல்வது இதுவே முதல் முறையாகும். 

கவுசல்யாவின் வெற்றியை பாராட்டி பேசிய ராதிகா சரத்குமார். கடைசி கேள்விக்கு சென்ற போது கவுசல்யா போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்ததாகவும், ஆனால் அவர் தான் ஊக்கம் அளித்து. இதுபோன்ற சாதனைகளை மாற்றுத்திறனாளிகள் செய்ததே இல்லை. இந்த வெற்றி பலருக்கும் உத்வேகம் அளிக்கும் எனக்கூறி தொடர்ந்து விளையாட வைத்ததாகவும் கூறியுள்ளார். கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கவுசல்யா 1 கோடி ரூபாயை வென்றது, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இன்று இரவு  8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.