‘ரஜினியின் ‘பேட்ட’ படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை பெரிய விலைகொடுத்து வாங்கியுள்ளேன். ஆனால் அப்படத்துக்கு தியேட்டர்களே கிடைக்கவிடாமல் சதி செய்கிறார்கள்’ என்று புலம்பித்தள்ளுகிறார் பிரபல தெலுங்கு படத்தயாரிப்பாளர் வல்லபனேனி அஷோக்.

இதற்கு முன்னர் மணிரத்னத்தின் ‘செக்கச்சிவந்த வானம்’ உட்பட ஏராளமான தமிழ்ப்படங்களின் டப்பிங் உரிமையை வாங்கி வெளியிட்டிருக்கும் அஷோக் தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளரும் கூட. ஆந்திரா, தெலங்கானாவில் என்.டி.ஆரின் ‘கதாநாயகடு’ ராம்சரணின் ‘விதய விநய ராமா’ மற்றும் ’எஃப் 2’ ஆகிய முக்கிய படங்கள் ரிலீஸாவதால் ரஜினி படத்துக்கு பத்து சதவிகிதத்துக்கும் குறைவான, அதுவும் மட்டமான தியேட்டர்களே கிடைத்துள்ளன. எதிர்பார்ப்பிலும் கூட ‘பேட்ட’ அங்கு நான்காவது இடத்திலேயே இருக்கிறது.

இது குறித்து பத்திரிகையாளர்களிடம் நேரடியாக புலம்பிய தயாரிப்பாளர் அஷோக், ‘ஒரு படத்துக்கு தியேட்டர் பிடிப்பதற்கு இதற்குமுன் இவ்வளவு கேவலமாய் அலைந்ததில்லை. பெரிய ஆட்கள் சிலர் தேவைக்கும் அதிகமாக தியேட்டர்களைப் பிடித்து வைத்துக்கொண்டு அராஜகம் செய்கிறார்கள். ரஜினி படம் தோற்றிவிடவேண்டும் என்பதற்காக சில பெரிய மனிதர்கள் கூட்டு சேர்ந்து வேலை செய்கிறார்கள்’ என்றும் குற்றம் சாட்டுகிறார்.

அவரது குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள சில தயாரிப்பாளர்கள்,’ சங்கராந்திக்கு ரிலீஸாகும் மூன்று தெலுங்குப் படங்களின் ரிலீஸ் தேதிகள் ஆறு மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டவை. அதில் திடீரென்றுதான் ‘பேட்ட’ உள்ளே புகுந்தது. அப்புறம் எப்படி தியேட்டர்கள் கிடைக்கும்?’ என்று பதிலளித்திருக்கிறார்கள்.