பொங்கல் ரிலீஸுக்காக தியேட்டர் குழப்பங்கள் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் நேற்று மீண்டுமொரு ’பேட்ட’ போஸ்டரை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

இதுவரை வெளியிடப்பட்ட போஸ்டர்களில் ரஜினி த்ரிஷாவுடன் இருப்பதைவிட சிம்ரனுடன் இருப்பது போன்ற ஸ்டில்கள் அதிகம் வெளியிடப்பட்டுள்ளதால், படத்திலும் இதே நிலைதான் நீடிக்குமோ என்று ரஜினி ரசிகர்களும் தமிழக மக்களும்  கவலை அடைந்துள்ளனர்.

கதைப்படி, ஃப்ளாஷ்பேக்கில் வரும் ரஜினிக்கு த்ரிஷா ஜோடியாக இருக்கிறார். ‘பேட்ட’ தாதா கதை என்பதால் ஃப்ளாஷ்பேக்கை அரைமணி நேரத்துக்கும் மேல் ஓட்டமுடியாது. அந்த அரை மணிநேரத்திலும் ரஜினி தொடர்ச்சியாக த்ரிஷாவை லவ் பண்ணிகொண்டிருந்தால், அவர் எப்போது வில்லன்களால் பாதிக்கப்பட்டு பழிவாங்குவது என்ற கேள்வி தன்னாலேயே வரும்.

எனவே குத்துமதிப்பாக யோசித்தால் படத்தில் த்ரிஷா ஒரு கால்மணி நேரத்துக்கு மேல் வர வாய்ப்பில்லை என்றேபடுகிறது. நேரடிக்கதையிலும் ஆக்‌ஷன் பகுதிகள் அதிகம் இருப்பதால் சிம்ரன் கூடுதலாக ஒரு பத்து நிமிடம் அதாவது சுமார் அரைமணி நேரப்படத்தில் வர வாய்ப்பிருக்கிறது. இந்தப் பகுதியிலும் ரஜினி சிம்ரனுக்குப் பின்னாலேயே சுத்திக்கொண்டிருந்தால் விஜய் சேதுபதி, நவாசுதின் சித்திக்,சசிக்குமார் போன்ற வில்லன்களைப் பழிவாங்க அவருக்கு அவகாசம் வேண்டாமா?

ரஜினி வேறு செய்திகளுக்கு இடம்தராமல் அமெரிக்கா சென்றுவிட்டதால் இப்படியெல்லாம் விபரீத சிந்தனைகள் ஓடுகின்றன. மன்னித்தருள்க மகாஜனமே.