அடுத்த 5 நாட்களுக்கு கமலின் தேர்தல் பிரச்சாரத்துக்குத் தடை விதிக்கக்கோரியும் அவரது கட்சியின் அங்கீகாரத்தை நிரந்தரமாக ரத்து செய்யக்கோரியும் தமிழக தேர்தல் ஆணையத்தில் அவசர மனு கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 19-ம் தேதி நடைபெறவுள்ள 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று அங்கு பிரசாரம் செய்தார்.அப்போது அவர் பேசுகையில் முஸ்லிம்கள் நிறைய இருக்கும் பகுதி என்பதால் இதனை சொல்லவில்லை. காந்தி சிலைக்கு முன்னாள் சொன்னேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர் பெயர் நாத்ராம் கோட்சே. அங்கு துவங்குகிறது அது. நான் காந்தியின் மானசீக கொள்ளுபேரன். அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்திருக்கிறேன் என்று நினைத்துக் கொள்ளுங்கள்’ என்று விவகாரமாகப் பேசினார்.

 அந்தப் பேச்சு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் கமல்  மீது தமிழக தேர்தல் ஆணையத்தில் வழக்கறிஞர் அஸ்வினிகுமார் உபாத்யாயா புகார் மனு அளித்துள்ளார். 

அந்தப் புகார் மனுவில்,...அரவக்குறிச்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி கமல்ஹாசன் பேசியுள்ளார். அவரது தேர்தல் பிரசாரத்துக்கு குறைந்தது 5 நாட்களுக்கு தடை செய்ய வேண்டும், கமல் மீது வழக்கு பதிவு செய்யவும், மேலும் அவரது கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரியும்  வலியுறுத்தப்பட்டுள்ளது.