ரசிகர்மன்றங்களின் கொந்தளிப்பால் தனது அரசியல் விவகாரத்தில் தீவிர செயல்பாடுகளில் இறங்கவேண்டிய நெருக்கடியான நிலையிலும் ’பரியேறும் பெருமாள்’ படம் பார்த்துவிட்டு அதன் இயக்குநரை நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார் ரஜினி. 

"ஒரு நாவலைப்போல திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறீர்கள், பல இடங்களில் நான் சிலிர்த்துவிட்டேன், மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது... ஒரு அதிர்வை ஏற்படுத்திவிட்டீர்கள் வாழ்த்துக்கள் படக்குழுவினருக்கு" என்று ட்விட்டரில் பாராட்டிய ரஜினி, நேற்று இயக்குநர் மாரிசெல்வராஜையும் நேரில் சந்தித்தார். 

ரஜினியுடனான சந்திப்பு குறித்து பதிவிட்ட மாரிசெல்வராஜ்... ’எப்படி சொல்வது ....சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் அழைத்திருந்தார். பரியேறும் பெருமாள் பார்த்த தன் அனுபவத்தையும் அதன் மூலம் தான் அடைந்த மன அதிர்வையும் பகிர்ந்துகொண்டதோடு எங்களின் பெரும் உழைப்பையும் கனவையும் சிலாகித்து பாராட்டினார். ஒரு இயக்குனராக உடலும் மனமும் அதிர்ந்த அந்த நிமிடங்கள் என்றைக்கும் யாரிடமும் மிக சரியாக பகிரமுடியாதவை மிக்க நன்றி சூப்பர் ஸ்டார் அவர்களே’ என்று நன்றி அறிவித்திருக்கிறார். 

‘காலா’ ரிலீஸுக்குப் பிறகு இயக்குநர் பா.ரஞ்சித் இருக்கும் திசையைக்கூட திரும்பிப்பார்க்காத ரஜினி அவர் தயாரித்த ‘பரியேறும் பெருமாளை’ தரிசித்ததில் உள்ள அரசியல் யாருக்கும் சொல்லித்தெரியவேண்டியதில்லை.