மதுரை மாவட்டம் பரவையைச் சேர்ந்தவர் பரவை முனியம்மா. சிறுவயதில் இருந்தே நாட்டுப்புற பாடல்களைப் பாடி வந்தவருக்கு, தூள் படத்தில் விக்ரமுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 

அப்படத்தில் சிங்கம் போல நடந்து வாரான் செல்லப் பேராண்டி பாடல் மூலம் அவரது கம்பீரக் குரல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. அதனைத் தொடர்ந்து சில படங்களில் நடித்துக் கொண்டே, பாடல்களும் பாடி வந்தார். தொலைக்காட்சியிலும் சமையல் நிகழ்ச்சி நடத்தி வந்தார்.

வயோதிகம் மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த  பரவை முனியம்மா பற்றி தகவல் அறிந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர்  ஜெயலலிதா, வைப்புத் தொகையாக 6 லட்சம் ரூபாயையும், மாதம் தோறும் 6 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையையும் வழங்க உத்தரவிட்டார்.

கடந்த ஆண்டு  அதிகம் உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட பரவை முனியம்மா தனக்கு ஏதேனும் ஏற்பட்டால், தனக்கு பின் அரசு உதவித்தொகையை தனது மாற்றுத்திறனாளி மகனுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் உடல்நலக் குறைவால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் பரவை முனியம்மா. அங்கு தனக்கு தெரிந்தவர்கள் மூலம் அரசுக்கு மீண்டும் ஒரு கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார். அதில், “நான் இறந்த பிறகு தனக்கு மாதந்தோறும் வழங்கப்படும் 6 ஆயிரம் ரூபாய் பணத்தை மாற்றுத்திறனாளியான எனது மகனுக்கு வழங்க வேண்டும்” என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.