ராஜராஜசோழ மன்னன் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் பேசிய கருத்து அவர் இயக்கியிருக்கும் 4 படங்களை விடவும் சூப்பர் ஹிட் ஆகியிருக்கும் நிலையில் அதற்கு இணையாக வலைதளங்களிலும்  அவர் வறுத்தெடுக்கப்படுகிறார். அவர் மீது சில இடங்களில் வழக்குகளும் பதியப்பட்டு வரும் நிலையில் இந்தியா முழுக்க அவருக்கு ஆதரவாக கையெழுத்து திரட்டும் முயற்சியில் சிலர் இறங்கியுள்ளனர்.

கருத்துரிமைக்கு ஆதரவாக எழுத்தாளர்கள் மற்றும் திரைக்கலைஞர்கள் கூட்டறிக்கை என்ற பெயரில் அனுப்பட்டுள்ள அந்த அறிக்கையில்,...இயக்குநர் பா. இரஞ்சித்தின் ராஜராஜ சோழன் குறித்த கருத்து பேசுபொருளாகியிருப்பது அனைவரும் அறிந்ததே. அவர் கூறிய கருத்தை சற்று பின்னோக்கிப் பார்ப்போமானால், ஆய்வுபுலத்தில் விவாதத்துக்குள்ளாகியிருக்கும் விஷயங்களைத் தான் பா.இரஞ்சித் பேசியிருக்கிறார் என்பது தெரியவரும். ஆகவே, அவைதொடர்பான விவாதங்கள் தொடரவே  செய்யும். பா.இரஞ்சித்தின் கருத்தையும் இதன் தொடர்ச்சியாகவே பார்க்க வேண்டியுள்ளது.  எனவே அவர் கருத்தை ஆரோக்கியமான உரையாடலின் வழியாகவே விவாதப்படுத்த வேண்டும் .

 ஆனால், பா. இரஞ்சித் விஷயத்தில் முற்றிலும் மாறாக நடந்து வருகிறது. அவர் கூறிய கருத்துக்காக  மிக மோசமாக வசைபாடப்பட்டார். சாதி சங்கங்கள், மதவாத அமைப்புகள், இனவாத குழுக்கள் அவருடைய அலைபேசி எண்ணைப் பொதுவெளியில் பகிர்ந்தார்கள். அவருக்குத் தொடர்ந்து கொலைமிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது,  பா. இரஞ்சித் தன் மனைவி குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை ஒரு கட்சியின் தேசிய செயலாளரே தன்னுடைய முகநூலில் பதிவிட்டு விமர்சிக்கிறார். அரசாங்கமே பா. இரஞ்சித்துக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டு அது விசாரணையில் இருக்கிறது.  இந்த போக்குகள் கருத்து சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதாக மாறியிருக்கிறது என்று கருதுகிறோம். 

குறிப்பாக ஒரு படைப்பாளியின் கருத்துச் சுதந்திரம் இப்படி அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்போது, கருத்துச் சுதந்திரத்தின் மீது நம்பிக்கை கொண்ட சக படைப்பாளிகளாக அவருடன் நிற்க வேண்டியது  அனைவரது கடமையும் ஆகும். ஆகவே, பா. இரஞ்சித்திற்கு ஆதரவாக ஒரு அறிக்கையை வெளியிட்டு அதில் கருத்து சுதந்திரத்தை ஆதரிப்பர்களுடைய கையொப்பங்களையும் இணைக்கிறோம். இதனை தங்கள் ஊடகங்களில் வெளியிட்டு கருத்து சுதந்திரத்திற்கான ஆதரவைத் தர வேண்டுகிறோம்’என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைக்கு ஆதரவாக இந்தியா முழுக்க சுமார் 300 எழுத்தாளகள் கையொப்பமிட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.