"தகுதியான படத்தை ரசிகர்கள் கைவிடமாட்டார்கள்"... திரெளபதி விஷயத்தில் பலித்துவிட்டதா பா.ரஞ்சித் வாக்கு??
நறுவி பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பா.ரஞ்சித், நல்ல படங்களை ரசிகர்கள் கைவிடமாட்டார்கள் என்று கூறியுள்ளார், அவர் பொதுவாக கூறிய கருத்து திரெளபதி படத்திற்கும் பொருந்தி போயுள்ளது.
பழைய வண்ணாரப் பேட்டை தொடர்ந்து, மோகன் ஜி இயக்கியுள்ள திரைப்படம்‘திரெளபதி’. இதில் ரிச்சர்டு நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக ஷீலா ராஜ்குமார் நடித்துள்ளார். மேலும் ஜீவா ரவி, கருணாஸ், நிஷாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நாடக காதல் தோலுரிக்கும் படம் என்று கூறப்படும் இந்த படம் முதலில் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது.
இதன் டிரெய்லர் ரிலீஸ் ஆன போதே எதிர்ப்பும் ஆதரவும் ஒன்றாக எழுந்தது. படத்தை ரிலீஸ் செய்ய சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர் . இந்நிலையில் பல எதிர்ப்புகளை மீறி திரௌபதி படம் இன்று ரிலீஸ் ஆகியிருக்கிறது.
வெற்றிமாறன், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்களின் சாதிய அரசியல் குறியீடுகளை எதிர்க்கும் விதமாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக சிலர் கூறிவருகின்றனர். பெரிய நட்சத்திரங்கள் இல்லாமல், சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் தேறுமா?...என்ற சந்தேகம் திரையுலகினர் இடையே இருந்தது. ஏனென்றால் சோசியல் மீடியாவில் கிடைக்கும் பப்ளிசிட்டி, அப்படியே வசூலாக மாறும் என உறுதியாக கூறமுடியாது.
இந்நிலையில், செல்லா நடிப்பில் உருவாகி இருக்கும் “நறுவி” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் பா.ரஞ்சித், இங்கு யாரும் யாரையும் நம்பிப் பிறக்கவில்லை. அவரவரின் தனித்தனி முயற்சி அவரவர்களுக்கான அடையாளத்தைத் தரும்.
இந்தப்படத்தில் உள்ள விஷுவல்ஸ் எல்லாம் நல்லாருக்கு. தகுதியான படத்தை தமிழ்சினிமா ரசிகர்கள் கை விடுவதே இல்லை. ஊடகமும் நல்ல படத்தைக் கொண்டாடியே தீருவார்கள். இந்த படம் பெரிதாக வெற்றிபெற வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்தார்.
இயக்குநர் பா.ரஞ்சித் பொதுவாக சொன்ன இந்த கருத்து திரெளபதி படத்திற்கு பொருந்தி போயுள்ளது. என்ன தான் சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும் திரெளபதி படத்திற்கு மக்களின் ஆதரவு பெருகி வருகிறது. என்னதான் எதிர்ப்புகள் வந்தாலும், தடைகளை தாண்டி வந்த திரெளபதி வசூலில் சாதனை படைப்பாள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் காலை முதலே தியேட்டர்களில் கூட்டம் சும்மா அள்ளுது. சூப்பர் ஸ்டார் படத்திற்கு கொடுக்கும் வரவேற்பை போல, கட் அவுட், பாலாபிஷேகம் என வேற லெவலுகு மக்கள் படத்தை கொண்டாடிவருகின்றனர்.
இதனிடையே, பா.ரஞ்சித் பேச்சை கேட்ட திரெளபதி ஆதரவாளர்கள், அதான் அவரே சொல்லிட்டாரே நல்ல படத்துக்கு மக்கள் ஆதரவு தருவாங்க, கொண்டாடுவாங்கன்னு அதுதானே திரெளபதி படத்துக்கு இப்ப உங்க கண்ணு முன்னால நடத்துக்கிட்டு இருக்கு, அப்போ படத்தோட கதை எவ்வளவு ஸ்ட்ராங்குன்னு தெரிஞ்சிக்கோங்க. அதைவிட்டுட்டு, குறிப்பிட்ட சாதியை அவதூறு செய்ய எடுக்கப்பட்ட படம்ன்னு தப்பான கருத்த பரப்பாதீங்கன்னு சொல்லிட்டிருக்காங்களாம்.