இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்ட அறிமுக நடிகர் ஜேடி நடிக்கும் 'பயமறியா பிரம்மை' பட ஃபர்ஸ்ட் லுக்!
ராகுல் கபாலி இயக்கும், அறிமுக நாயகன் ஜேடி நடிக்கும் 'பயமறியா பிரம்மை' பட ஃபர்ஸ்ட் லுக்கை, பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ளார்.
புதுமுக நடிகர் ஜேடி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'பயமறியா பிரம்மை' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநரும், தயாரிப்பாளரும், தமிழ் திரையுலகின் படைப்புலக ஆளுமையுமான பா. ரஞ்சித் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் ராகுல் கபாலி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பயமறியா பிரம்மை' எனும் திரைப்படத்தில் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நந்தா- வி. பிரவீண் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே இசையமைத்திருக்கிறார். சதீஷ் கலை இயக்கத்தை கவனிக்க, படத்தின் படத்தொகுப்பு பணிகளை அகில் பிரகாஷ் மேற்கொண்டிருக்கிறார். ஒலி வடிவமைப்பை விஜய் ரத்னமும், ஒலி கலவையை ரஹ்மத்துல்லாவும் கையாண்டிருக்கிறார்கள். கிரைம் திரில்லர் வகையிலான இந்த திரைப்படத்தை 69 எம் எம் ஃபிலிம் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெகதீஷ் மற்றும் ராகுல் கபாலி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' படத்தின் கதை 90 மற்றும் 2000ஆம் ஆண்டில் நடைபெறுவது போல் அமைக்கப்பட்டிருக்கிறது. அனைத்து கதாபாத்திரங்களும் முன்னுரிமை கொடுத்து படத்தின் திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது. கிரைம் திரில்லர் வகையிலான படைப்பில் ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை 'பயமறியா பிரம்மை' தரும்'' என்றார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதுமாக நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்களின் தோற்றம் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றிருக்கிறது.
மேலும் 'பயமறியா பிரம்மை' எனும் இந்த திரைப்படம் இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் நடைபெற்ற ஆறுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல விருதுகனை வென்றிருக்கிறது என்பதும், இந்த ஆண்டு கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டு, பலரின் பாராட்டுகளை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.