தமிழ் சினிமாவின் வீழ்ச்சிக்கு தானும், வெற்றிமாறனும், மாரி செல்வராஜும்தான் காரணம் என்ற விமர்சனங்களுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் பைசன் பட விழாவில் தரமான பதிலடி கொடுத்திருக்கிறார்.
Pa Ranjith's response to critics : தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களைக் கொண்ட இயக்குநர்களில் பா.ரஞ்சித், வெற்றிமாறன், மற்றும் மாரி செல்வராஜ் ஆகியோரும் அடங்குவர். தங்கள் படங்கள் மூலம் வலுவான அரசியலைப் பேசி, தமிழ் சினிமாவில் ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்கியதில் இந்த மூவருக்கும் பெரும் பங்குண்டு. இந்நிலையில், தங்களுக்கு எதிரான விமர்சனங்களுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் பதிலளித்துள்ளார். மற்ற மொழிப் படங்கள் வெற்றி பெற்றால் பழி தங்கள் மீது போடப்படுவதாகவும், வருட இடைவெளியில் படங்கள் எடுக்கும் தங்களால் எப்படி தமிழ் சினிமா துறை வீழ்ச்சியடையும் என்றும் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
பா.ரஞ்சித் காட்டம்
"இப்போது 'பான் இந்தியா' என்ற வார்த்தையை எல்லோரும் பயன்படுத்துகிறார்கள். மற்ற மொழிகளில் ஏதாவது ஒரு படம் ஹிட்டானால், பழி எங்கள் மூன்று பேர் மீதுதான் விழுகிறது. அது எனக்குப் புரியவே இல்லை. தமிழ் சினிமாவில் ஒரு வருடத்திற்கு 300 படங்கள் வெளியாகின்றன. நான் இரண்டு வருடத்திற்கு ஒரு படம் எடுக்கிறேன். மாரி செல்வராஜ் இதுவரை ஐந்து படங்கள்தான் இயக்கியுள்ளார். வெற்றிமாறன் சார் மூன்று வருடத்திற்கு ஒரு படம் எடுக்கிறார்.

இந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் அறுநூறு படங்கள் வந்திருக்கும். ஆனால் தமிழ் சினிமாவை அழிப்பது இந்த மூன்று இயக்குநர்கள்தான் என்று சொல்கிறார்கள். நான் மொத்தமாக இயக்கியதே ஏழு படங்கள்தான். இந்த ஏழு படங்களால் தமிழ் சினிமா அழிந்துவிட்டதா? மற்ற இயக்குநர்கள் அப்போது என்ன செய்கிறார்கள், ரசிகர்கள் நீங்கள் என்ன செய்கிறீர்கள்?" என்று மாரி செல்வராஜின் 'பைசன்' பட புரோமோஷன் நிகழ்ச்சியின் போது பா.ரஞ்சித் பேசினார்.
துருவ் விக்ரம் நாயகனாக நடித்துள்ள 'பைசன்' திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் பா.ரஞ்சித்தும் ஒருவர். இப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. அனுபமா பரமேஸ்வரன் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். மேலும், பசுபதி, ரஜிஷா விஜயன், லால் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அமீரும் இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
