’கருத்துசுதந்திரம் மனிதர்களின் உரிமை.சொல்லப்படும் கருத்து புண்படுத்துவதாகஇல்லாமல் பண்படுத்துவதாக இருந்தால் ஏற்றுக்கொள் ஓவியா.  விமர்சனங்கள் தரமானதாகயிருந்தால் காதில் வாங்கி காதணியாக மதி. தரம் தாழ்ந்திருந்தால் காலுக்குக் கீழ் காலணியாக்கி மிதி. இதுவரை பாவமே செய்யாதவர்கள் எங்கள் ஓவியா  மீது கல் எறியுங்கள்’...ரொம்பவும் குழம்ப வேண்டாம். யூடிபில் நடிகை ஓவியாவை அசிங்க அசிங்கமாகத் திட்டி கூச்சலிடுபவர்களுக்கு எதிராக ஓவியா ஆர்மியின் சோல்ஜர் ஒருவரின் பதில்தான் இது.

இரு தினங்களுக்கு முன்பு வெளியான ஓவியா நடித்த படமான ‘90 எம்.எல்’ ட்ரெயிலர்தான் இப்போதைக்கு வலையுலகின் ஹாட் டாபிக். 18 வயது தொடங்கி 60 வயது வரை உள்ளவர்கள் மட்டும் பார்க்கவும் என்ற அறிவிப்புடன் வரும் அந்த ட்ரெயிலரில் ஓவியாவும் இன்னும் மூன்று பெண்களும் தம் அடிப்பது, கஞ்சா அடிப்பது, சரக்கடிப்பது, உதட்டைக் கவ்வி கிஸ் அடிப்பது என்று சகட்டுமேனிக்கு ஆடித்தீர்க்கிறார்கள். அந்த யூடுப் வீடியோவுக்குக் கீழே உள்ள 4ஆயிரத்துச் சொச்ச கமெண்டுகளில் ‘நாசமாப்போவீங்கடா’வுக்கு அப்புறம் விஜய் தம் அடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி,ராம்தாஸ் ஐயாக்களைத்தான் விஜய் ரசிகர்கள் அதிகமாக வச்சு செய்திருக்கிறார்கள்.

இந்நிலையில் தனது படம் குறித்து எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு நக்கலாக, மறுபடியும் ஒரு டபுள்மீனிங்கில் பதில் அளித்துள்ள ஓவியா ‘விதையை மட்டும் வைத்து எதையும் தீர்மானிக்காதீர்கள். முழுப் பழத்தையும் சாப்பிட்டுப் பார்த்துவிட்டு கமெண்ட் அடியுங்கள்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தில்லாக பதில் அளித்திருக்கிறார்.

ஓவியாவின் இந்த ட்விட்டர் பதிவும் தற்போது ட்ரெண்டிங் ஆக, கலாச்சாரக் காவலர்கள் என்றொரு குரூப்பும், ஓவியா ஆர்மியினரும் அசிங்கமான கெட்ட வார்த்தைகளால் பரஸ்பரம் அர்ச்சனை செய்துகொண்டிருக்கிறார்கள்.