கேரள நடிகை கடத்தப்பட்ட சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும் என நடிகர் திலீப் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாலியல் துன்புறுத்தல்

பிரபல கேரள நடிகை, கடந்த பிப்ரவரி 17-ம் தேதி இரவில் காரில் சென்றுகொண்டிருந்தபோது மர்ம நபர்களால் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டார்.

பின்னர் அவரை நடுவழியில் விட்டுவிட்டு அந்த நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இது தொடர்பாக அந்த நடிகை அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

திலீப் கைது

போலீஸார், குற்றம்சாட்டப்பட்ட முக்கிய நபரான பல்சர் சுனி உள்ளிட்ட 6 பேரைக் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, இந்த விவகாரத்தில் மலையாள நடிகர் திலீப்புக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, திலீப்பை ஜூலை 10-ஆம் தேதி கைது செய்த போலீஸார், அவரை ஆலுவா நகர கிளைச் சிறையில் அடைத்தனர். நடிகையைக் கடத்தி, துன்புறுத்துவதற்கான சதித்திட்டத்தை திலீப்தான் தீட்டினார் என்று போலீஸார் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் நடிகர் திலீப் தற்போது நிபந்தனை ஜாமீனில் விடுதலை ஆகி இருக்கிறார்.

சி.பி.ஐ. விசாரணை

இந்நிலையில் நடிகை கடத்தப்பட்ட சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை செய்யவேண்டும் என்று நடிகர் திலீப் கூறியுள்ளார். இது தொடர்பாக உள்துறைச் செயலாளருக்கு 12 பக்கக் கடிதத்தை அவர் எழுதியுள்ளார்.

கேரளக் காவல்துறை அதிகாரிகளால், தான் இந்த வழக்கில் தேவையில்லாமல் சேர்க்கப்பட்டுள்ளதாக திலீப் அக்கடிதத்தில் கூறியுள்ளார்.

நம்பிக்கை இல்லை

‘‘கேரளக் காவல்துறையின் விசாரணை மீது தனக்கு நம்பிக்கை இல்லை. இந்த வழக்கை சிபிஐ நடத்தினால் பல உண்மைகள் வெளிவரும்’’ என்றும், கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.