யார் யாரோ எது எதற்கோ ஆண்டு விழா எடுத்து வரும் நிலையில் ’வைரமுத்து மீது பாலியல் வழக்கு போட்டு ஒரு வருஷம் ஆச்சு. ஆனா எதுவுமே நடக்கலை’என்று மிகுந்த ஆதங்கத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் கொதித்துக் குமுறியிருக்கிறார் பாடகி சின்மயி.

கடந்த 8ம் தேதியன்று கமலின் பிறந்தநாள் விழாவுக்கு வைரமுத்து சிறப்பு விருந்தினராக வரவழைக்கப்பட்டதற்கு கடும் கண்டனங்களைப் பதிவு செய்திருந்த சின்மயி இன்று மீண்டும் வைரமுத்துவை வம்பிழுத்திருக்கிறார். தான் வைரமுத்து மீது பாலியல் புகார் கொடுத்து ஒரு வருடம் நிறைவு பெற்றுள்ளதை நினைவு கூர்ந்த அவர்,...நான் வைரமுத்து மீது அதிகாரபூர்வமாக புகார் கொடுத்து ஒரு வருடம் ஆகிவிட்டது...டப்பின் யூனியனிலிருந்து என்னை ராதாரவி நீக்கி ஒரு வருடம் ஆகிவிட்டது...ஒரு விசாரணையும் நடக்காமல் ஒரு வருடம் ஓடிவிட்டது...இந்த வெளிப்படையான ரகசியங்களைக் கண்டும் காணாதது போல் கொண்டாடித் தீர்க்கிற மக்களுக்கு இவர்கள் தான் தேவை...என்று விளாசித்தள்ளியிருக்கிறார்.

அடுத்து போட்ட இன்னொரு பதிவில் ஒரு அரசியல் வார இதழை வம்புக்கிழுத்திருக்கும் சின்மயி,...’பிஜேபிக்கு ஆதரவாகச் செயல்படுத்துவதற்காகவே நான் வைரமுத்து மீது பாலியல் குற்றம் சுமத்தியதாகவும், அதற்காக எனக்கு பெங்களூருவில் ஒரு வீடு வாங்கித் தரப்பட்டதாகவும் செய்தி வெளியிட்டு அந்த வீட்டின் புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார்கள். அந்த வீட்டின் சாவி இதுவரை எனக்கு வந்து சேரவில்லை. என் வீடு எங்கே? என்று வீட்டுச் சாவி கேட்டு தவியாய்த் தவித்திருக்கிறார்.