தமிழ் மகா ஜனங்கள் மீது, குறிப்பாக தமிழ் மீடியாக்கள் மீது செம கடுப்பில் இருக்கிறார் ரஜினி. தனது படத்தின் வசூல் குறித்து, வெற்றி குறித்து படத்தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் விளம்பரக்குறிப்பை, கேள்வி கேட்காமல் அனைத்தையும் பொத்திக்கொண்டு அப்படியே போடவில்லையே என்கிற கடுப்பு அது.

இந்நிலையில் அடுத்து பரவி வரும் செய்திகள் ரஜினிக்கு இன்னும் எரிச்சலூட்டக்கூடியது. இது, இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் அரசியல் சினிமா என்ற இரட்டைக்குதிரையில் ரஜினி சவாரி செய்வது? கமல் போலவே அவரும் தனது சினிமா ரிடையர்மெண்டை அறிவித்துவிட்டு முழுநேர அரசியலில் இறங்கவேண்டும். அல்லது அரசியலுக்கு இதோ வருகிறேன் அதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டுவதை நிறுத்தவேண்டும் என்பது.

‘2.0’ படத்திலேயே ரஜினியின் வயதான தோற்றம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. நல்லவேளையாக அவருக்கு, ஷங்கர் எமி ஜாக்‌ஷனுடன் டூயட் வைக்கவில்லை என்று ரஜினி ரசிகர்களே நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

இன்னொரு பக்கம் பேட்ட ரவுடியாக ரஜினி நடித்திருக்கும் கார்த்திக் சுப்பாரஜின் பட ஸ்டில்களிலும் ரஜினியின் தோற்றம் மிகவும் பரிதாபமாக இருக்கிறது. நேற்று சிம்ரனுடன் வெளியான ஸ்டில் ஒன்றை வெளியிட்டு ‘இதுல யாரு யாரைத் தாங்கிப் புடிச்சிட்டிருக்காங்கன்னே புரியலையே பாஸ்’ என்று சிலர் எகத்தாளம் செய்கிறார்கள்.

முன்பு போல இல்லாமல் ரஜினி முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட வலைதளங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறார். சினிமாவில் கவுரமாக, கமல் பாணியில் நல்ல மார்க்கெட், மரியாதை இருக்கும்போதே ரிடையர் ஆனால்தான் அரசியல் எண்ட்ரியில் மரியாதை கிடைக்கும் என்பது ரஜினிக்கு தெரியாததல்ல.

இப்போதைய லேட்டஸ்ட் நிலவரப்படி ரஜினி, வரும் டிசம்பர் 12 தனது பிறந்த நாளன்று ஏ.ஆர். முருகதாசுடன் இணைந்திருக்கும் படமே தனது கடைசிப் படம் என்று அறிவிக்க அதிக சாத்தியமுள்ளதாகவே ராகவேந்திரா மண்டப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.