மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மெழுகு சிலை சிங்கப்பூரில் உள்ள மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகத்தில்  இன்றுமுதல் பார்வையாளர்களுக்காக திறந்து வைக்கப்படுகிறது.இந்த மெழுகு சிலை 1987 ஆம் ஆண்டு வெளியான ‘மிஸ்டர் இந்தியா’ படத்தில் இடம் பெற்ற ஸ்ரீதேவின் லுக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 சிங்கப்பூரில் உள்ள மேடம் துசாட்ஸ் சிங்கப்பூர் ஒரு மெழுகு அருங்காட்சியகம் மற்றும் சுற்றுலா தலமாகும். இந்த அருங்காட்சியகம் சென்டோசா தீவின் இம்பியா லுக் அவுட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மிகவும் பிரபலமான குறிப்பிட்ட விளையாட்டு சின்னங்கள், அரசியல் சின்னங்கள், சூப்பர்ஸ்டார்கள் போன்றவர்களின் மெழுகு உருவங்கள் உள்ளன. 

தமிழ்த் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகையாக வலம் வந்து பின்னர் இந்தியத் திரையுலகம் முழுக்க லேடி சூப்பர் ஸ்டாராக பவனிவந்தவர் ஸ்ரீதேவி. கடந்த ஆண்டு எதிர்பாராதவிதமாக மரணமடைந்த ஸ்ரீதேவியின் நினைவைப் போற்றும் விதமாக மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகம் தத்ரூபமாக மெழுகு சிலை ஒன்றை வடிவமைத்துள்ளது.இந்த சிலை உருவாக்கம் பற்றிய வீடியோ ஒன்றை மேடம் துஸாட்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இதுகுறித்து ஸ்ரீதேவியின் மகளும் நடிகையுமான ஜான்வி கபூர், “ஸ்ரீதேவி எங்கள் மனதில் மட்டுமல்ல, கோடிக்கணக்கான அவரது ரசிகர்களின் மனங்களிலும் என்றென்றும் வாழ்வார். மேடம் துஸாட்ஸ் அமைத்துள்ள சிலையைக் கண்டு சிலிர்ப்படைந்துவிட்டேன்’ என்கிறார்.

மேடம் துஸாட்ஸ் உலகின் பல நாடுகளில் உள்ள தங்கள் அருங்காட்சியகங்களில் சர்வதேச பிரபலங்களின் சிலைகள் பலவற்றை அமைத்துள்ளது. அதில் இந்தியக் கலைஞர்கள், விளையாட்டு வீரர்களின் சிலைகளும் அதிகளவில் அணிவகுக்கின்றன.நெல்சன் மண்டேலா, மகாத்மா காந்தி, குயின் எலிசபெத் 2, பாராக் ஒபாமா, சச்சின் டெண்டுல்கர், ஜாக்கி சான், அமிதாப் பச்சன், கஜோல், ஷாருக் கான், ஐஸ்வர்யா ராய், மைகேல் ஜாக்சன், ஸ்பைடர் மேன், ஐயன் மேன் போன்ற பலரது உருவங்கள் உள்ளன. அதோடு நமது இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மெழுகு சிலையும் இங்கு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ‘இது ஸ்ரீதேவி சிலை போல அவர் மகள் ஜான்வி கபூர் போல உள்ளது’என்று வழக்கம்போல் வலைதளங்களில் சிலர் கலாய்த்துவருகிறார்கள்.