’தற்செயலாய் பரபரப்பான ஒரு கண் சிமிட்டலுக்கு மற்றவர்கள் சபலப்படலாம். ஆனால் படத்தின் இயக்குநரே அந்த சபலத்துக்கு ஆளாகி முதலில் கதாநாயகியாகத் தேர்வு செய்ய்ப்பட்ட என்னை ஓரங்கட்டினார்’ என்று ‘ஒரு அடார் லவ்’ இயக்குநர் உமர் லுலு மீது குற்றம் சாட்டுகிறார் படத்தின் இன்னொரு நாயகியான நூரின் ஷெரிஃப்.

ஓமர் லுலு இயக்கத்தில் ரோஷன் அப்துல் ரஹூஃப், ப்ரியா பிரகாஷ் வாரியர், நூரின் ஷெரீஃப் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஓரு அடார் லவ்'. 'மாணிக்க மலராய பூவி' பாடல், ப்ரியா பிரகாஷ் வாரியரின் டீஸர் வைரல் என மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது. இந்தியத் திரையுலகில் மிக முக்கியமான நடிகர்கள் அனைவருமே ப்ரியா பிரகாஷ் வாரியரின் கண் சிமிட்டலுக்கு ஒரு நிமிடம் ஆடித்தான் போனார்கள்.

இந்நிலையில் கடந்த வாரம் மலையாளம், தெலுங்கு, தமிழ் மொழிகளில் ஒரே நேரத்தில் ரிலீஸான இப்படம் மொழி பேதமின்றி ஊத்திக்கொண்டது. ஜாலியாகச் சென்ற படத்தில் ரத்தவாடை வீசும் கிளமேக்ஸ்தான் காரணம் என்று கருதி வேறொரு கிளைமேக்ஸை ஷூட் கடந்த புதனன்று முதல் இணைத்துப்பார்த்தும் படம் செல்ஃப் எடுக்கவில்லை. 

இந்நிலையில் இப்படத்தில் இரண்டாவது நாயகியாக  நடித்த நூரின் ஷெரீஃப் படக்குழுவினர் மீது குற்றம் சாட்டியுள்ளார். நூரின் ஷெரீஃப் அளித்துள்ள பேட்டியில், “இயக்குநர் ஓமர் லுலு என்னைக் கதாநாயகியாக தேர்ந்தெடுத்ததும் மிக மகிழ்ச்சியடைந்தேன். ஆனால், ப்ரியா வாரியரின் கண் சிமிட்டல் வைரல் ஆனதால்,  மொத்தக் கதையையும் மாற்றி என் கதாபாத்திரத்தை ஓரம் கட்டினார்கள். சிறு வேடத்தில் நடிக்கவந்த பிரியாவின் கேரக்டரை ஊதிப்பெருக்கவைத்தார்கள்.

திரையில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் முதல் வாய்ப்பு இதுதான். என் கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் குறைந்ததால் மிகுந்த ஏமாற்றமடைந்தேன்” என்று தெரிவித்துள்ளார். நூரின் ஷெரீஃப்பின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.