Nowhere to come to politics - Rajinikanth pushing the war

அரசியலுக்கு வருவதற்கான அவசரம் தற்போது இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் போரை தள்ளிப் போட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து பல்வேறு கருத்துக்கள் உலவி வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், சிஸ்டம் கெட்டுப் போய் உள்ளது என்று தனது முதல் அரசியல் வார்த்தையை உதிர்த்தார்.

அதனை சரிசெய்ய அரசியல் வருகை விரைவில் நடக்கும் என்று அறிவித்திருந்தார். ஆனால், அரசியல் வருகை என்னுடைய கையில் இல்லை. ஆண்டவன் கையில் மட்டுமே உள்ளது என்றும் புதிர் போட்டார்.

பின்னர், போர் வரும் என்றும் தயாராக இருக்கும்படியும் கூறினார். இதனால் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதற்குள் நடிகர் கமல் ஹாசன் முந்திக் கொண்டார். அதிரடியான அரசியல் கருத்துக்களை தெரிவித்து வரும் அவர், கட்சி தொடங்குவது, நிதி திரட்டுவது என்று பல்வேறு அதிரடிகளை காட்டினார்.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், "பிறந்தநாளுக்கு ரசிகர்களை சந்திப்பேன்" என்றும் "அதன்பிறகு போர் குறித்து அறிவிக்கப்படும்" என்றும் தெரிவித்தார். மேலும், "அரசியலுக்கு வரவேண்டிய அவசரம் தற்போது இல்லை" என்றும் கூறி மீண்டும் அரசியல் பிரவேசத்தை தள்ளிப்போட்டுள்ளார்.