பிகில் திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி பெறும் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு முழுக்க முழுக்க விஜய் தான் காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சர்கார் படத்தில் அதிமுக அரசுடன் உரசிய காரணத்தினால் அப்போது முதலே விஜய் மீது அதிமுக தரப்புக்கு அதிருப்தி இருந்து வந்தது. இதனால் பிகில் படத்திற்கு எப்படியும் ரிலீஸ் சமயத்தில் பிரச்சனை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விஜய் வான்டடாக சென்று வண்டியில் ஏறியது போல, பிகில் பாடல் வெளியீட்டு விழாவில் சொன்ன குட்டிக் கதை தற்போது வில்லங்கமாகியுள்ளது.

யாரையும் வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும் என்று விஜய் கூறியது எடப்பாடி பழனிசாமியைத்தான் என்று திமுக தரப்பு கொளுத்திப் போட அது தான் தற்போது பிகில் சிறப்பு காட்சிக்கு தடை என்கிற வரை சென்றுள்ளது. பொதுவாக சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி பெறுவது  திரையரங்குகளின் பொறுப்பு ஆகும். ஒவ்வொரு ஊரில் உள்ள திரையரங்குகள் சிறப்பு காட்சிகளுக்கு அந்த ஊரின் உள்ளாட்சி அமைப்புகளை தொடர்பு கொண்டு அனுமதி பெற்றுக் கொள்ளலாம்.

அந்த வகையில் பிகில் படத்தின் திரையிடல் உரிமையை பெறும் திரையரங்குகள் மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களிடம் கடிதம் கொடுத்து அனுமதி பெற்றுக் கொள்ள முடியும். கடந்த வாரமே பிகில் படம் வெளியாகும் திரையரங்குகள் இறுதி செய்யப்பட்டுவிட்டன. இதனால் அந்த திரையரங்குகள் உள்ளூர் அமைப்புகளின் பொறுப்பாளர்களை அதிகாலை சிறப்புக் காட்சிக்கான அனுமதி கேட்டு காத்திருந்தனர்.

ஆனால் தற்போது வரை எந்த ஒரு திரையரங்கிற்கும் அதிகாலை சிறப்புக் காட்சிக்கான அனுமதி கிடைக்கவில்லை. இது குறித்து விசாரித்த போது, மேலிடத்தில் இருந்து இன்னும் ஒப்புதல் வரவில்லை என்று பதில் வந்துள்ளது. இதனை அடுத்து திரையரங்க உரிமையாளர்கள் விநியோகஸ்தர்களை தொடர்பு கொண்டு சிறப்புக் காட்சிக்கு அனுமதி இல்லை என்றால் கொடுத்த காசில் பாதியை திருப்பி கொடுக்க வேண்டும் என்று எகிறியுள்ளனர்.

இதனால் பதறிப்போன விநியோகஸ்தர் தரப்பு தயாரிப்பு தரப்பை தொடர்பு கொண்டுள்ளது. ஆனால் தயாரிப்பு தரப்போ அரசின் பிரதிநிதியாக ஒருவரை கூட தொடர்பு கொள்ள முடியவில்லை. காரணம் விஜயை வைத்து படம் எடுத்தீர்கள் அல்லவா, அவரை எங்களிடம் பேசச் சொல்லுங்கள் என்று பதில் வருகிறதாம். ஆனால் இந்த விஷயத்தில் எல்லாம் என்னால் தலையிட முடியாது என்று விஜய் தரப்பு சொல்லிவிட்டதாக பேசுகிறார்கள்.

இதனால் பதறிப்போன தயாரிப்பு தரப்பு திருப்பூரை சேர்ந்த பிரபல விநியோகஸ்தர் மற்றும் திரையரங்க உரிமையாளரை உதவிக்கு அழைத்ததாக சொல்கிறார்கள். ஆளும் தரப்புடன் நெருக்கமாக இருக்கும் இவர் கொங்குமண்டலத்தில் சக்தி வாய்ந்த நபராக வலம் வரும் ஒருவர் மூலம் பேச்சு நடத்துவதாக சொல்கிறார்கள். வழக்கமான கவனிப்புடன் இந்த முறை கூடுதல் கவனிப்பு இருந்தால் தான் சிறப்புக் காட்சிக்கு அனுமதி என்று தற்போது தயாரிப்பு தரப்புக்கு பதில் வந்துள்ளாக கடைசி தகவல் கிடைத்துள்ளது.