ரஜினியுடன் புகைப்படம் எடுத்து கொள்ள அடையாள அட்டை இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று அவரது ரசிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த், ஆண்டுக்கு ஒரு தடவை தமது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இது நடைபெறவில்லை.

ஏற்கனவே, ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரம் நடந்து வரும் நிலையில், ரசிகர்களுடன் போட்டோ எடுத்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அப்போது, அரசியலுக்கு வருமாறு தொண்டர்கள் வற்புறுத்துவார்கள், அதனால், இப்போதைக்கு அரசியல் இல்லை என்று சொன்னால் கூட, அது பாஜக வுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால், பாஜக தலைவர்கள், அந்த நிகழ்ச்சியை ஒத்திவைக்குமாறு கேட்டு கொண்டனர் என்று செய்திகள் வெளியாயின.

அதை தொடர்ந்து, ரஜினியுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி, நாளை தொடங்கி, வரும் 19 ம் தேதி வரை, சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் 5 நாட்கள் நடைபெறுகிறது.

ரஜினி நடிக்கும் 2 .௦ படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், ரசிகர்கள் ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்து கொள்ளும் நிகழ்ச்சி நடை பெறுகிறது.

முதல் கட்டமாக, பத்து மாவட்டங்களை சேர்ந்த ரஜினி ரசிகர்கள் அவருடன் போட்டோ எடுத்து கொள்கின்றனர். தனித்தனியாக படம் எடுத்து கொள்வது சாத்தியம் இல்லை என்பதால், குரூப்பாக எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, முதலில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, சிதம்பரம், கடலூர், புதுச்சேரி, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், தஞ்சை, கரூர் ஆகிய 10 மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் அவர் போட்டோ எடுத்து கொள்கிறார்.

இந்நிலையில், ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள மாவட்ட வாரியாக மன்ற உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

அடையாள அட்டை இல்லாதவர்கள் கண்டிப்பாக மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அவரது ரசிகர் மன்ற தலைமை நிர்வாகிகள் கண்டிப்பாக கூறிவிட்டனர்.

எந்த ஆதாயமும் இல்லாமல், ரஜினியின் ஒவ்வொரு படம் வெளியாகும்போது, போஸ்டர் ஒட்டி, பேனர் கட்டி, கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் எல்லாம் செய்யும் பொது, யாரும் ரசிகர் மன்ற அடையாள அட்டை கேட்கவில்லை.

தற்போது, ரஜினியுடன் போட்டோ எடுத்து கொள்ள மட்டும் அடையாள அட்டையுடன் வா என்று நிபந்தனை விதித்தால் எப்படி?

இப்படியே விட்டால், பிற்காலத்தில் அரசு அலுவலகங்களில் சொல்வது போல, ஆதார் அட்டை இருந்தால்தான் புகைப்படம் எடுக்க முடியும் என்று சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்றே ரசிகர்கள் சிலர் புலம்புகின்றனர்.