‘சர்கார்’ படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் தியேட்டர் லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என்று உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளை அறிவித்திருக்கும் நிலையில், அடுத்த அதிரடியாக கூடுதல் காட்சிகள் திரையிடவும் தடை வாங்கப்பட்டுள்ளது.

தீபாவளி உள்ளிட்ட விடுமுறை நாட்களில் படங்களை கூடுதல் காட்சிகள் திரையிட்டாலோ, அதிக விலைக்கு டிக்கெட் விற்றாலோ வழக்கு தொடர்வேன் என்று சமூக ஆர்வலர் தேவராஜ் என்பவர் தெரிவித்து இருந்தார்.

இதை வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட்டு பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் கூடுதல் காட்சிகள் திரையிட தடைவிதித்து உத்தரவிட்டது.

இது பற்றி தேவராஜ் கூறுகையில்,  ‘சர்கார்’ உள்ளிட்ட படங்களில் விதிகள் மீறப்படுகிறதா என்று கண்காணிப்பேன். நடவடிக்கை இல்லாவிட்டால் வழக்கு தொடுப்பேன். ஒரு ரூபாய் அதிகம் வாங்கினாலும்,  அனுமதி இன்றி கூடுதல் காட்சி  ஓட்டினாலும் கண்டிப்பாக வழக்கு போடுவேன். நீதிமன்றத்திற்கு தேவை ஆதாரம். அந்த ஆதாரத்துடன் வழக்கு தொடுப்பேன்’ என்றார்.

ஆனால் இதுபோன்ற விதிமுறைகளை இதுவரை தியேட்டர்காரர்கள் பொருட்படுத்தியதாக வரலாறு இல்லை.