தனுஷின் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’நீண்ட நெடுங்காலமாய்க் கிடப்பில் உள்ள நிலையில் அவரது மற்றொரு படமான ‘பக்கிரி’யும் விற்பனையாகாமல் பரிதாப நிலையில் இருப்பதாக விநியோகஸ்தர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தனுஷ் நடித்த பிரெஞ்சு – ஆங்கிலப் படமான ‘தி எக்ஸ்டார்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்’ படம் தமிழில் ‘பக்கிரி’ என்ற பெயரில் விரைவில் வெளியாக இருக்கிறது. ஹாலிவுட் இயக்குனர் கென் ஸ்காட் இயக்கியிருக்கும் இந்த படம் ஜக் வார்ட்ரோப் எழுதிய, ‘தி எக்ஸ்டார்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்’ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட காமெடி படம்.

தனுஷுடன் ஃபெர்னைஸ் பெஜோ, பர்காத் அப்தி, அபெல் ஜப்ரி, எரின் மோரியார்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்தப் படத்தை தமிழில் டப் செய்து தனுஷ் வெளியிட திட்டமிட்டிருந்தார். அதற்கான போஸ்டர்ஸ் கூட வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு பிரான்சில் வெளியான இந்தப்படத்துக்கு எதிர்பார்த்த அளவுக்கு பெரிய அளவில் வரவேற்பில்லை. சர்வதேசப் பட விழாக்களிலும் கூட இப்படம் சோபிக்கவில்லை.

எனவே தமிழில் இப்படத்தை வெளியிட யாரும் முன்வராத நிலையில் தந்து வுண்டர்பார் நிறுவனத்தின் மூலம் இதை வெளியிட முதலில் தனுஷ் திட்டமிட்டிருந்தார். ஆனால் வுண்டர்பார் நிறுவனத்துக்குப் பூட்டுப்போடும் நிலை ஏற்பட்டு விட்டதால் எந்த விநியோகஸ்தரின் தலையில் இந்த ‘பக்கிரியைக் கட்டுவது என்று துக்கிரித்தனமாக யோசித்து வருகிறார் தனுஷ்.