எக்கச்சக்கமான சர்ச்சைகளில் சிக்கி மூச்சு முட்டிக்கொண்டிருந்த நயன்தாராவின் ‘கொலையுதிர்காலம்’ படத்திற்கு விதிக்கப்பட்ட கோர்ட் தடை நீங்கியுள்ளது. சக்ரி டோலட்டி இயக்கியுள்ள இப்படம் இரண்டு மாதங்களாக பல்வேறு சிக்கல்களில் மாட்டித் தவித்து வருகிறது.

மறைந்த பிரபல எழுத்தாளரான சுஜாதா எழுதிய கொலையுதிர்காலம் நாவலை அவருடைய மனைவியிடம் இருந்து 10 லட்சம் ரூபாய்க்கு இயக்குனர் பாலாஜி குமார் வாங்கி உரிமம் பெற்றிருந்தார். ‘கொலையுதிர்காலம்’ ரிலீஸுக்கு சில தினங்கள் முன்பு வரை அமைதி காத்த அவர் திடீரென படத்தின் டைட்டில் காப்புரிமை தன்னிடம் இருப்பதாகக்கூறி கோர்ட்டில் தடை வாங்கினார்.தான் தன்னுடைய தாயார் பெயரில் உரிமைத்தை பெற்று வைத்திருக்கும் நிலையில் கொலையுதிர்காலம் என்கிற தலைப்பில் திரைப்படத்தை வெளியிடுவது காப்புரிமையை மீறிய செயல் என்று பாலாஜிகுமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணசாமி ராமசாமி, நயன்தாரா நடித்திருந்த கொலையுதிர்காலம் திரைப்படத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த தடையை நீக்ககோரி படத்தின் தயாரிப்பாளர் மதியழகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் படத்தின் தலைப்புக்கு எந்த காப்புரிமையும் கிடையாது என்று அவர் தெரிவித்திருந்தார்.அவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை இன்று மீண்டும் விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, தலைப்புக்கு எந்த காப்புரிமையும் இல்லாத காரணத்தினால் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி படத்தை வெளியிட அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். 

இதே கதையை வைத்து இதே இயக்குநர் இந்தியில் இயக்கியிருந்த ‘காமோஷி’படம் படு மோசமாகத் தோல்வி அடைந்திருக்கும் நிலையில் ‘கொலையுதிர்காலம்’படத்தை விநியோகஸ்தர்கள் யாரும் வாங்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.