’குழந்தை நட்சத்திரமாக இருந்த காலத்திலிருந்தே நான் கமலின் தீவிர ரசிகை. ‘பாபநாசம்’ படத்தில் அவரது மகளாக நடித்தது என் வாழ்நாள் முழுக்க நான் மறக்கமுடியாத பாக்கியம்’ என்கிறார் இன்றைய வளர்ந்த நட்சத்திரம் நிவேதா தாமஸ்.

தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் இன்று முன்னணி நாயகி அந்தஸ்துக்கு உயர்ந்திருக்கிறார் நிவேதா தாமஸ். குழந்தை நட்சத்திரத்திலிருந்து ஹீரோயினாக புரமோஷன் ஆகியிருப்பது குறித்துப் பேசிய அவர், “எனக்கு சிறுவயதிலேயே கலைத்துறையில் ஆர்வம் ஏற்பட்டு 8 வயதில் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கேரள அரசிடம் விருதும் வாங்கினேன். குழந்தை நட்சத்திரமாக வந்தவர்கள் ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகிவிட்டனர். சிலர் பட வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்டனர்.ஆனால் எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. இப்போது கதாநாயகியாகவும் மாறி விட்டேன். நான் மலையாள குடும்பமாக இருந்தாலும் சென்னையில்தான் வளர்ந்தேன். இதனால் தமிழ், மலையாள மொழிகள் தெரியும், இப்போது தெலுங்கும் கற்றுக்கொண்டேன். சினிமாவில் கதைதான் ஆத்மா. கதைக்கே முக்கியத்துவம் கொடுக்கிறேன்.நடிகர்-நடிகைகள் எவ்வளவு திறமையானவர்களாக இருந்தாலும் கதை நன்றாக இல்லாவிட்டால் படம் ஓடாது. எனவே சினிமாவுக்கு கதைதான் ஆத்மா. இந்த வருடம் எனது நடிப்பில் 5 படங்கள் வெளியாக வேண்டும் என்று விரும்புகிறேன். நான் கமல்ஹாசனின் தீவிர ரசிகை. பாபநாசம் படத்தில் அவரது மகளாக நடித்தது எனது வாழ்நாள் பாக்கியம். நடிகையை விட இந்த நடிகை சிறப்பாக நடித்தார் என்று ஒப்பிட்டு பேசுவது பிடிக்காது. கதாநாயகர்களோடு நடிகைகளை ஒப்பிட்டு பேசும் நிலை வரவேண்டும். எதிர்காலத்தில் ஒரு நல்ல நடிகை என்று பேர்வாங்கும்போது இன்னொரு கதாநாயகியுடன் அல்ல கதாநாயகனோடு கம்பேர் பண்ணப்படவேண்டுமென்பதே என் விருப்பம்’ என்கிறார் நிவேதா.