கிரிக்கெட் வீரர் ராகுல் மற்றும் நடிகை நிதி அகர்வால் ஆகியோருக்கு இடையேயான உறவு குறித்த தகவல்கள் அண்மைக்காலமாக பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக ஏற்கனவே ராகுல் விளக்கமளித்த நிலையில், நடிகை நிதி அகர்வாலும் தற்போது விளக்கமளித்துள்ளார்.

இளம் கிரிக்கெட் வீரர் ராகுல், நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அதிரடியாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஐபிஎல் அதிரடியால், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இடம்பிடித்தார். இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் சிறப்பாகவே ஆடினார். அடுத்ததாக ஒருநாள் தொடரிலும் ஆட உள்ளார்.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக ஆடிய ராகுல், அதிரடியில் மிரட்டினார். 11வது சீசன் பஞ்சாப் அணிக்கு சரியாக அமையவில்லை என்றாலும், ராகுலுக்கு சிறப்பாகவே அமைந்தது. ஐபிஎல் முடிந்து சில நாட்களுக்கு பிறகு ராகுலும் நடிகை நிதி அகர்வாலும் மும்பையில் ஒரு ஹோட்டலுக்கு ஒன்றாக சென்ற புகைப்படங்கள் வைரலானது. 

இந்த புகைப்படங்கள், இருவர் இடையேயான உறவு தொடர்பான பல்வேறு கருத்துகள் உலாவர வழிவகுத்தன. இருவருக்கும் இடையே காதல் என கூறப்பட்டது. இருவரும் காதலிக்கிறார்களா? என்ற கேள்வி எழுந்தது. அதுதொடர்பான பல்வேறு தகவல்களும் வதந்திகளும் உலவ ஆரம்பித்தன. 

இதுதொடர்பகா ஏற்கனவே விளக்கமளித்த ராகுல், இருவரும் நீண்ட கால நண்பர்கள் எனவும் அதைக்கடந்து இருவருக்கும் இடையே வேறு எந்த உறவும் கிடையாது எனவும் விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில், இதுதொடர்பாக நடிகை நிதி அகர்வாலும் விளக்கமளித்துள்ளார். ராகுலுடனான உறவு குறித்து பேசிய நிதி அகர்வால், இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள். நீண்டகால நண்பர்கள். நான் நடிகையாவதற்கும் ராகுல் கிரிக்கெட் வீரராவதற்கும் முன்பிலிருந்தே நாங்கள் நண்பர்கள். எனவே இந்த வதந்திகள் என்னையோ அல்லது எங்களுக்கு இடையேயான நட்பையோ எந்தவிதத்திலும் பாதிக்காது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்தியில் முன்னா மைக்கேல் என்ற படத்தில் நடிகையாக அறிமுகமாகிய நிதி அகர்வால், தெலுங்கில் நடித்துள்ள சவியாசாச்சி திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.