பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடன் இல்லத்தில் இருந்த விருந்தினர்கள் ’கேங் ராகிங்’செய்ததாக நடிகை மதுமிதா பற்ற வைத்த நெருப்பொன்று பற்றி எரியத் தொடங்கியிருக்கிறது. அந்நிகழ்ச்சியில் மதுமிதாவுக்கு நடந்த அநீதிக்கு எதிராக தரப்பட்ட மனு ஒன்றை மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.

இன்னும் 13 நாட்களே மிச்சமிருக்கும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி எத்தனையோ விசித்திரமான சர்ச்சைகளைக் கடந்து வந்துள்ள நிலையில் தற்போது திடுக் திருப்பமாக, அந்நிகழ்ச்சிக்கு எதிராக மனித உரிமை ஆணையமே களம் இறங்க உள்ளதால் நிகழ்ச்சி முடிந்த பிறகும் சில வாரங்களுக்குப் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்று தோன்றுகிறது.

இந்த சீஸனில் அதிக சர்ச்சைகளை விஜய் டிவிக்கு அள்ளிக்கொடுத்துப் பரபரப்பை இன்னும் நீடிக்கச்செய்துகொண்டிருக்கும் நகைச்சுவை நடிகை மதுமிதா, தான் கையை அறுத்துக்கொண்டதற்கான காரணம் குறித்துக் கூறுகையில் தன்னை ஹவுஸ் மேட்ஸ் மொத்தமாக ஒன்று சேர்ந்து கேங் ராகிங் செய்தததாகவும் தான் கையை அறுத்துக்கொண்டபோது, இருவர் தவிர, மற்ற அனைவரும் வேடிக்கை பார்ப்பதாகவும் கூறியிருந்தார். இது தொடர்பாக கொஞ்சம் குழப்பமான காரணங்களுக்காக பரஸ்பரம் விஜய் டி.வியும்,மதுமிதாவும் காவல் நிலையங்களில் புகார் கொடுத்திருந்த நிலையில் சம்பவம் அத்தோடு முடிந்துவிட்டதாகக் கருதப்பட்டது.

இந்நிலையில் மதுமிதாவுக்கு நடந்த அநீதிக்கு நியாயம் கேட்டு விஜயலட்சுமி தேவராஜன் என்பவர் மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுத்திருந்தார். தற்போது அந்த மனு ஏற்கப்பட்டு மிக விரைவில் விசாரணை நடக்க உள்ளதாகவும் மதுமிதாவிடம் தவறாக நடந்துகொண்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இவ்விசாரணையின்போது தனக்குத் தொல்லை கொடுத்தவர்கள் என்று யார் யார் பெயரை மதுமிதா சொல்கிறாரோ அவர்கள் எல்லாம் கம்பி எண்ணவேண்டிய நிலைமை வந்தாலும் ஆச்சர்யப்படவேண்டியதில்லை.