சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை நடிகர் ரஜினிகாந்த்துக்கு ரசிகர்கள் வழங்கினர். அந்தப் பட்டத்தை தனது படங்களின் வசூல், சம்பளம் போன்றவற்றின் மூலம் இன்று ரஜினிகாந்த் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

ஆனால்  நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இடையே அடுத்த சூப்பர் ஸ்டார் தங்களது தலைவர்கள் தான் என்று சமூக வலைதளங்களில் கடுமையாக மோதி வருகின்றனர்.

இந்த நிலையில்தான் விஜயின் அம்மா ஷோபா சந்திரசேகர் விஜய்க்கு ஒரு கடிதம் எழுதி அடுத்த சூப்பர் ஸ்டார் நீதாம்ப்பா என கொளுத்திப் போட்டுள்ளார். அதுவும் விஜயை எம்ஜிஆருக்கு நிகராக அவர் குறிப்பிட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எம்ஜிஆர் ரசிகர்களையும், அதிமுகவினரையும் இது கோபப்படுத்தியுள்ளது.


இது தொடர்பாக அவர் எழுதியிள்ள கடிதத்தில் ‛நான் பெற்ற பிள்ளை இன்று கோடானு கோடி தாய்மார்கள், ரசிகர்கள் உள்ளங்களில் தவழ்ந்து கொண்டிருப்பதையும், தளபதியாய் கொண்டாடிக் கொண்டிருப்பதையும் காண்கையில் என் இமை ஓரம் ஈரம் கசிந்து வழிகிறது என தெரிவித்துள்ளார்.

. எம்கே தியாகராஜ பாகவதர், எம்ஜிஆர், ரஜினிகாந்த் வரிசையில் அடுத்த சூப்பர் ஸ்டாராக உன்னை கொண்டாட உலகமே காத்திருக்கையில், தாய் என்பதையெல்லாம் மறந்து ரசிகர்களுடன் கூட்டத்தோடு கூட்டமாக நானும் அடிக்கிறேன் ஒரு நீண்ட பிகில்” என முடித்துள்ளார். 

இதில் அடுத்த சூப்பர் ஸ்டார் என விஜய்யை, அவரே குறிப்பிட்டுள்ளார். அதாவது பரவாயில்லை, எம்.ஜி.ஆர்., வரிசையில் விஜய்யையும் கொண்டு வந்துள்ளார். இது தான் இப்போதைய சர்ச்சைக்குக் காரணமாகி உள்ளது. 

ஏற்கனவே அஜித் மற்றும் விஜய் ரசிகர்களிடையே யார் சூப்பர் ஸ்டார் என்ற மோதல் இருந்து வரும் நிலையில் தற்போது ஷோபா சந்திரசேகரின் இந்த கடிதம் மேலும் அனலைக் கக்கி வருகிறது.