’முதன் முதலாக இளையராஜா இசையில் பாடச் சென்றபோது மிகவும் நெர்வஸாக இருந்தது. நான் பாடி முடித்தவுடன் அவர் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு கண் கலங்கி அழுதுவிட்டேன்’என்கிறார் ‘வானம் கொட்டட்டும்’படத்தின் மூலம் மணிரத்னத்தால் இசையமைப்பாளராக அறிமுகப்பட்டுள்ள பாடகர் சித் ஸ்ரீராம்.

2013ல் வெளிவந்த மணிரத்னத்தின் ‘கடல்’படத்தில் ‘அடியே’பாடல் மூலம் அறிமுகமான பிசி பாடகர் சித் ஸ்ரீராம்.கர்நாடக சங்கீதத்திலும் கரைகண்டவரான இவரை தனது நிறுவனம் தயாரிக்கும் ‘வானம் கொட்டட்டும்’படத்தின் மூலம் இசையமைப்பாளராக உயர்த்தியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். இப்படத்தின் பாடல்களை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிடவிருக்கிறார்.

13’ல் துவங்கி ஆறுவருடங்களாக பிசியாகப் பாடிவரும் சித் ஸ்ரீராம், இளையராஜாவின் இன்னிசைக் கச்சேரிகள் ஒன்றிரண்டில் கலந்துகொண்டிருக்கிறாரே ஒழிய, அவரது படத்தில் ஒரு பாடல் கூட பாடவில்லை. இந்நிலையில் மிஷ்கினின் ‘சைக்கோ’படத்தில் பாடுவதற்கு ராஜாவிடமிருந்து அழைப்பு வந்தவுடன் திக்குமுக்காடிப்போய்விட்டதாகக்கூறுகிறார் ஸ்ரீராம்.

‘ராஜாவின் அழைப்பை ஏற்றுப் பாடுவதற்கு ரெகார்டிங் தியேட்டருக்குள் நுழைந்தபோது சத்தியமாக ஒரு கனவுலகத்தில் இருப்பதுபோலவே இருந்தது. நிச்சயமாக அவர் நம் காலத்தின் மேதையேதான். நான் கேள்விப்பட்டது போலவே அவர் எழுதிய சங்கீதக் குறிப்புகளை அட்சரம் பிசகாமல் பாடவேண்டும் என்பதில் மிகவும் கறாராக இருந்தார். ஆனால் உற்சாகப்படுத்திக்கொண்டேதான் இருந்தார். அந்தப் பாடலை முடித்ததும் அவர் காலைத் தொட்டு வணங்கி, என்னை ஆசிர்வதிக்கணும் சார் என்றேன். அதற்கு அவர் நீ ஏற்கனவே நன்கு ஆசிர்வதிக்கப்பட்டவர்தான் என்றவுடன் என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து அழுதுவிட்டேன்’என்கிறார் தமிழ் சினிமாவின் புதிய இசையமைப்பாளர்.