பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பெயர் குறிப்பிடாமல் யாரை மிரட்டினார் என்கிற விவாதம் எழுந்துள்ளது.

நடிகர் விஜயின் சர்கார் பட வெளியீட்டின் போது அப்படத்தில் இடம் பெற்று இருந்த சில காட்சிகளுக்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மதுரையில் சர்காருக்கு எதிராக தொடங்கிய போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. சர்கார் படம் பல்வேறு திரையரங்குகளில் நிறுத்தப்பட்டது.

இலவச மிக்சிக்கு எதிரான காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி சர்கார் படத்திற்கு விஜய் ரசிகர்கள் வைத்த பேனர்கள் கிழிக்கப்பட்டன. சேலத்தில் பேனரை கிழித்த அதிமுகவினரை தட்டிக் கேட்ட விஜய் ரசிகர்கள் தாக்கப்பட்டனர். பிறகு சன் பிக்சர்ஸ் அதிமுக தரப்புடன் சமாதானமாக சென்றது.

படத்தில் இருந்து சர்ச்சைக்கு உரிய காட்சி நீக்கப்பட்டது. இதனால் சர்கார் படம் திட்டமிட்டபடி திரையரங்குகளில் ஓடியது. இந்த நிலையில் நேற்று விஜயின் பிகில் திரைப்பட பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் கலந்து கொண்ட பேசினார். அப்போது தனது ரசிகர்கள் மிகவும் ஆசையாகவும் எதிர்பார்ப்புடனும் பேனர்கள் வைப்பதாக தெரிவித்தார்.

அந்த பேனர்களை, கட் அவுட்டுகளை கிழிச்சப்ப என் ரசிகர்கள் மாதிரி நானும் வருத்தப்பட்டேன். என், போட்டோ பேனரை கிழிங்க பிரச்சனை இல்லை. ஆனால் என் ரசிகன் மேல கை வைக்காதீங்க. என் ரசிகர்கள் ஆசைகளோட, கனவுகளோட பேனர் வைக்குறாங்க. அத கிழிச்சா அவங்களுக்கு கோவம் வரும் தான். அதுக்காக அவங்க மேல கைவைக்காதீங்க, இது வேண்டுகோள். கேட்க முடிஞ்சா கேளுங்க, இல்லனா..? என்று கூறி முடிக்காமல் விஜய் தனது பேச்சை கடந்து சென்றுவிட்டார். ஆனால் அவர் அப்படி இல்லைனா? என்று கூறியிருப்பது பேனரை கிழித்த அதிமுகவினருக்கு விடுத்த எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.