ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து முடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது ஐதராபாத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ தலைப்பை சன்பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று அறிவித்தது. அந்த படத்திற்கு அண்ணாத்த என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நேற்று முதலே #அண்ணாத்த #Annaatthe ஆகிய ஹேஷ்டேக்குகள் டுவிட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பெற்றுள்ளது. 

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான ரஜினியின் இந்த டைட்டில் தெலுங்கு படத்தின் காப்பி என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். 2000ம் ஆண்டு மெகா ஸ்டார் சிரஞ்சீவி தெலுங்கில் நடித்த அன்னய்யா என்ற தலைப்பை அப்படியே சுட்டு, தமிழுக்கு மாற்றிவிட்டனர். தெலுங்கில் அன்னய்யா என்றால் தமிழில் அண்ணாத்த என்று பொருளாம். 

தலைவர் பட தலைப்பிற்காக காத்திருந்த ரசிகர்களை இந்த செய்தி மிகவும் வேதனையடைச் செய்துள்ளது. சூப்பர் ஸ்டாரின் ஹிட்டு படங்களான பொல்லாதவன், மாப்பிள்ளை, கெட்டவன், படிக்காதவன், முரட்டுக்காளை ஆகியவற்றை இப்போதைய ஹீரோக்கள் தலைப்பாக வைக்கும் போது, சூப்பர் ஸ்டார் படத்திற்கு தலைப்பை காப்பியடிப்பதா...? என்று அவரது ரசிகர்கள் கொதித்து போயுள்ளனர்.