50 நண்பர்களின் உதவியுடம் மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி வெற்றிபெற்ற ‘நெடுநல்வாடை’ படம் தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் பெங்களூருவில் முதல் சர்வதேச விருதை வென்றுள்ளது.

‘பூ’ ராமு, இளங்கோ, அஞ்சலி நாயர் ஆகியோரது நடிப்பில், அறிமுக இயக்குநர் செல்வக்கண்ணனின் இயக்கத்தில் கடந்த மார்ச் 15-ம் தேதி  வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று, அனைவராலும் பாராட்டையும் பெற்ற திரைப்படம் ‘நெடுநல்வாடை.’ பூ’ராமு தவிர்த்து படத்தில் நடித்த நடிகர்கள், டெக்னீஷியன்கள் அனைவரும் புதுமுகங்களே. 

சமீபத்தில் இத்திரைப்படம் Innovatie Film Acadamy(IFA)  சார்பில் பெங்களூரில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு அனைவரது பாராட்டையும், விருதையும் பெற்றுள்ளது. இத்திரைப்பட விழாவில் 26 நாடுகளிலிருந்து 106 திரைப்படங்கள் கலந்து கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இது பற்றி ‘நெடுநல்வாடை’ படத்தின் இயக்குநரான செல்வக்கண்ணன் பேசும்போது, “தமிழ் சினிமா துறையில்  உருவான முதல் CROWD FUNDING  திரைப்படம் எங்களது ‘நெடுநல்வாடை’ திரைப்படம்தான். இப்போது நினைத்தாலும் எங்களுக்கு இது மிகவும் பெருமையாக இருக்கிறது.

பல நாடுகளில் இருந்து, பல மொழிகளில் இருந்து வந்திருக்கும் பல முக்கியமான இயக்குநர்கள், சினிமாத் துறையில் வல்லுநர்கள் முன்பாக, எங்களை போன்ற புதியவர்கள் நிற்பது என்பது எங்களுக்கு  கிடைத்த மிகப் பெரிய பெருமை. எங்களை அங்கீகரித்த  Innovatie Film Acadamy அமைப்புக்கு மிகுந்த நன்றிகள். இதேபோல் எங்களது படத்தை இந்தத் திரைப்பட விழாவில் திரையிட பரிந்துரைத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும் எங்களது நன்றி.இந்த நேரத்தில் என்னுடைய தொழில் நுட்ப கலைஞர்கள், படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், படத்தை தயாரித்த என் நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்…” என்றார்.