நடிகை நயன்தாராவும் அவரது காதலர் விக்னேஷ் சிவனும் ’பிரிவோம் சந்திப்போம்’ என்ற முடிவெடுத்திருக்கிறார்கள் என்றொரு செய்தி சில நாட்களாக நொண்டியடித்துக்கொண்டிருக்கும் நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் சொந்தமாகத் தயாரிக்கும் படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார் என்று நெத்தியடி பதிலளித்திருக்கிறார்கள் இருவரும்.

தமிழ் சினிமா நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படம் தயாரித்து வருகி றார்கள். சூர்யா, தனுஷில் இருந்து விதார்த் வரை இந்த லிஸ்ட் நீள்கிறது. இயக்குனர்களில் லிங்குசாமி, திருப்பதி பிரதர்ஸ் என்ற நிறுவனத்தை வைத்திருக்கிறார். கவுதம் வாசுதேவ் மேனன், போட்டோன் கதாஸ் நிறுவனத்தையும் சசிகுமார் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ், பிரபு சாலமன் ஷாலோம் ஸ்டூடியோஸ், பாண்டிராஜ் பசங்க புரொடக்‌ஷன்ஸ், சுசீந்திரன் நல்லுசாமி பிக்சர்ஸ் என சொந்தப் பட நிறுவனங்களை தொடங்கி படங்களை தயாரித்து இயக்கியும் வருகின்றனர். மேலும் பல இயக்குனர்கள் தங்கள் சொந்த நிறுவனம் மூலம் படம் தயாரித்து வருகின்றனர்.மற்ற இயக்குனர்களுக்கும் படம் இயக்க வாய்ப்பளித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் இப்போது மிகவும் லேட்டாக  இணைந்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர், தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு ’ரவுடி பிக்சர்ஸ்’ என்று டைட்டில் வைத்துள்ளார். அவர் இயக்கிய நயன் விஜய் சேதுபதியின்  ’நானும் ரவுடிதான்’ ஹிட்டானதால் இந்தப் பெயரை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிறுவனம் மூலம் அவர் தயாரிக்கும் படத்தை அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்குகிறார். நயன்தாரா ஹீரோயின். மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இன்னும் முடிவாகவில்லை. விரைவில், படம் பற்றிய அறிவிப்பு வெளியாக இருக்கிறது. 

இந்நிலையில் நயன்தாராவின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘கொலையுதிர்காலம்’விநியோகஸ்தர்களைக் கொலையாகக் கொன்றிருப்பதால் அவர்களுக்கு திருப்பிக்கொடுக்க, வாங்கிய சம்பளப் பணத்தில் ஒரு பகுதையைத் திருப்பித் தரும்படி அப்பட தயாரிப்பாளர் லேடி சூப்பர் ஸ்டாருக்கு நெருக்கடி கொடுப்பதாகவும் அப்படி கொடுக்க முன்வராவிட்டால், அத்தொகையை ரவுடி பிக்‌ஷர்ஸ் நிறுவனத்துடன் அட்டாச் பண்ணவிருப்பதாகவும் தகவல்.