விஸ்வரூபம் 2 திரைப்படம் வெளியாகும் நாளில் வெளியாக இருந்த நயன்தாராவின் கோலமாவு கோகிலா தள்ளிப்போனதற்கு லைக்கா நிறுவனத்திடம் சென்று நடிகர் கமல் நடத்திய பேச்சுவார்த்தையே காரணம் என்று சொல்லப்படுகிறது. கடந்த 2013ம் ஆண்டே விஸ்வரூபம் 2 படத்தை எடுத்து முடித்துவிட்டார் கமல். ஆனால் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனுக்கு ஏற்பட்ட பைனான்ஸ் பிரச்சனையால் அந்த படத்தை வெளியிட முடியாத சூழல் இருந்தது. இந்த ஆண்டு துவக்கத்தில் ஆஸ்கர் பிலிம்சிடம் இருந்து விஸ்வரூபம் 2 திரைப்படத்தை கமலின் ராஜ்கமல் இன்டர்நேசனல் பிலிம்ஸ் வாங்கியது. பின்னர் சில காட்சிகளை மட்டும் மீண்டும் எடுத்து தற்போது படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

ஆகஸ்ட் 10ந் தேதியன்று விஸ்வரூபம் 2 உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. அதே நாளில் நயன்தாராவை கதையின் நாயகியாக வைத்து எடுக்கப்பட்டுள்ள கோலமாவு கோகிலா படமும் வெளியாக இருந்தது. ஏற்கனவே நயன்தாரா கதையின் நாயகியாக நடித்த அறம் திரைப்படம் நல்ல வெற்றி பெற்றது. மேலும் கோல மாவு கோகிலா டிரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதனால் நியோகஸ்தர்களும்,தியேட்டர் உரிமையாளர்களும் கோலமாவு கோகிலா படத்தை  அதிக திரையரங்குகளில் திரையிட முன்வந்தனர்.

கோலமாவு கோகிலா சிறிய பட்ஜெட்டில் உருவான படம். ஆனால் விஸ்வரூபம் 2 பெரிய பட்ஜெட் படம். இருந்தாலும் விஸ்வரூபம் 2க்கு 50 சதவீதும் கோலமாவு கோகிலாவுக்கு 50 சதவீதம் என தியேட்டர்களை பிரித்துக் கொள்ள விநியோகஸ்தர்கள் முடிவு செய்தனர். ஆனால் கமல் 50 சதவீத திரையரங்குகளில் மட்டும் விஸ்வரூபம் 2ஐ திரையிட்டால் போட்ட முதலை எடுக்கவே வெகு நாள் ஆகிவிடும். இதில் தமிழ்ராக்கர்ஸ் போன்ற திருட்டு இணையதளங்கள் வேறு படத்தை முதல் நாளிலேயே வெளியே விட்டுவிடுவார்கள் என்பதால் கோலமாவு கோகிலா படத்தை ஒத்திவைக்க முடியுமா என்று தயாரிப்பாளரான லைக்காவை அணுகினார்.

ஆகஸ்ட் 10க்கு பதில் ஆகஸ்ட் 24ந் தேதி கோலமாவு கோகிலாவை வெளியிடும் படி கமல் தரப்பில் லைக்காவிடம் கோரப்பட்டது. ஆனால் அத்தனை நாட்கள் ஒத்திவைக்க முடியாது வேண்டும் என்றால் ஒரே ஒரு வாரம் தள்ளி வைத்துக் கொள்கிறோம் என்று கமலுக்காக கரிசனம் காட்டியுள்ளது லைக்கா. இதனால் தான் ஆகஸ்ட் 10 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த விஸ்வரூபம் 2 ஆகஸ்ட் 17க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.