சில அசாத்தியமான முடிவுகளை எடுப்பதில் தன்னை மிஞ்சிக்கொள்ள ஆளே கிடையாது என்று அவ்வப்போது மற்ற நடிகைகளுக்கு நிரூபித்துவரும் நயன்தாரா பிரபல ஆர்.ஜே.வும் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகருமான பாலாஜிக்கு ஒரு ஷாக் கொடுத்துள்ளார். அடுத்து அவர் இயக்கவுள்ள ‘மூக்குத்தி அம்மன்’படத்தின் நாயகியாக நடிக்க சம்மதித்திருக்கிறார் நயன்.

தேர்ந்தெடுத்த படங்களில் மட்டும் நடித்துவரும் ஆர்.ஜே.பாலாஜி கடைசியாக ‘எல்.கே.ஜி’என்கிற ஹிட் படத்தில் கதைநாயகனாக நடித்திருந்தார். அடுத்து தானே கதை வசனம் எழுதி இயக்கப்போவதாக அறிவித்த அவர், கமல்,ஷங்கர் காம்பினேஷனில் தயாராகி வரும் ‘இந்தியன் 2’படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில் தான் அடுத்து இயக்கும் படத்துக்கான கதையை எழுதி முடித்த அவர் அதில் நாயகி நடிக்க நாலைந்து பெயர்களை யோசித்து வைத்து, சும்மா ஒரு எட்டு நயன்தாராவிடமும் போய் முயற்சித்துப் பார்ப்போமே என்று எண்ணி கதை சொல்ல அப்பாயின்மெண்ட் கேட்டவருக்கு உடனே ஓ.கே சிக்னல் கிடைத்திருக்கிறது.

அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமல் கதை சொல்லி முடித்தவருக்கு கிடைத்த அடுத்த அதிர்ச்சி,’கண்டிப்பா இதுல நான் தான் நடிப்பேன். வேற எந்த ஹீரோயின்கிட்டயும் இந்தக் கதையை சொல்லக்கூடாது’என்று நயனிடமிருந்து கிடைத்த பதில். இப்படத்தையும் ’எல்கேஜி’ தயாரிப்பாளரான வேல்ஸ் இன்டர்நேஷனல் ஐசரி கணேஷே தயாரிக்கிறார். ’மூக்குத்தி அம்மன்’ என்று பெயரிடப்பட்டுள்ள அப்படத்துக்கு தனது ‘நெற்றிக்கண்’படம் முடிந்த கையோடு நடித்துத்தர கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம் நயன்தாரா.