முன்பெல்லாம் கும்பிடுகிற மாதிரி இருக்கிற கே.ஆர்.விஜயா போன்றவர்களைத்தான் சீதை வேடங்களில் நடிக்கக் கூப்பிட்டார்கள். ஆனால் இப்போது கூப்பிடுகிற மாதிரி இருக்கிற நயன்தாரா போன்றவர்களையெல்லாம் கூட சீதை வேடத்தில் நடிக்கக் கூப்பிடுகிறார்கள்’ என்று ‘கொலையுதிர்காலம்’ பட விழாவில் ராதா ரவி பேசியது தமிழக இடைத்தேர்தலை விட ஹாட் டாபிக் ஆகியிருக்கும் நிலையில், வில்லங்கத்தை விலைபேசி வாங்கும் வகையில் நயனையும், அவரது காதலர் விக்னேஷ் சிவனையும் சந்தித்துப் பேசத்தயார் என்று அறிவித்திருக்கிறார் சர்ச்சைகளின் வில்லன் ராதாரவி.

ராதாரவியின் கொச்சையான பேச்சுக்கு திரையுலகினர் மத்தியிலும் அரசியல்வாதிகள் மட்டத்திலும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. தி.மு.க. அவரைக் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்திருக்கிறது. இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள ராதாரவி, தனது பேச்சு குறித்து விளக்கம் அளிக்க விக்னேஷ் சிவன், நயன் தாரா ஆகிய இருவரையும் சந்தித்துப்பேசத் தயார் என்று அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,’’நடிகை நயன்தாராவை பற்றி நான் பேசுவதற்கு இதுபோன்ற நடவடிக்கை எடுத்ததாக சொல்லப்படுகிறது. அவருக்கும் அவர் காதலருக்கும்  மனவருத்தத்தை தந்திருந்தால் [!]  நயன்தாராவும் அவரை திருமணம் முடிக்க இருக்கிற விக்னேஷ் சிவனுக்கும் நான் என் மன  வருத்தத்தை தெரிவிக்கிறேன்.

விருப்பப்பட்டால் என்னை அவர்கள் நேரில் சந்திக்கலாம். இல்லை நான் அவர்களை நேரில் சந்தித்து விளக்கம் தருகிறேன்.
 திமுகவில் இருந்து என்னை இடைநீக்கம் செய்வதற்கு விளக்கம் கேட்டால் உரிய விளக்கம் தருகிறேன்.அவர்கள் என்னை தகுதி நீக்கம் செய்வதை விட நானே விலகிக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்திருக்கிறார் ராதாரவி.