விஜயுடன் ’சிவகாசி’படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம், ‘வில்லு’ என்ற  அட்டர்ஃப்ளாப் படத்தில் ஜோடியாக மட்டுமே நடித்திருக்கும் நயன்தாரா சுமார் 9 ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ஜோடி சேருகிறார்.

‘தளபதி 63’ என்று இப்போதைக்கு டம்மியாகப் பெயரிடப்பட்டுள்ள படத்தை அட்லி இயக்குகிறார். மெகா பட்ஜெட்டில் சுமார் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்து ‘தனி ஒருவன்’ என்கிற தனி ஒரு ஹிட் படத்தை மட்டுமே கொடுத்துள்ள ஏ.ஜி.எஸ். எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

2009ல் பிரபுதேவா இயக்கத்தில் விஜய், நயன் இணைந்த ‘வில்லு’ படம் விஜயின் படுதோல்விப் படங்களுல் ஒன்று. ஆனாலும் அந்த செண்டிமெண்டைக் கணக்கில் கொள்ளாமல் நேற்று இப்படத்தில் நயன் கமிட் பண்ணப்பட்டுள்ளார் எனவும் அவர் பெயர் போர்டுக்கு வந்தவுடன் படத்தின் வியாபார சாத்தியம் மிகவும் விஸ்தாரமாகிவிட்டதாகவும் படத்தயாரிப்பு நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இப்படத்தில் நயன்தாராவை கமிட் பண்ண பேச்சு வார்த்தைகள் தொடங்கி ஒரு வாரத்துக்கும் மேலாகிவிட்டதாகவும், தனது சம்பளமாக ஐந்து விரல்களை நீட்டிய நயன் அதிலிருந்து ஒரு பைசா கூட குறைத்துக்கொள்ள ஒப்புக்கொள்ளாத நிலையில் பட நிறுவனம் வேறு வழியின்றி இறங்கி வந்ததாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.