உட்கட்சி அரசியலை சகித்துக்கொள்ள முடியவில்லை என்ற குற்றச்சாட்டோடு கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து முதல் முக்கிய விக்கெட்டாக வெளியேறிய நேச்சுரல்ஸ் நிறுவன அதிபர் குமரவேல் இன்று கமலின் முன் மீண்டும் கட்சியில் இணைந்தார்.

 நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினராக குமரவேல் நியமிக்கப்பட்டார். பிரபல நேச்சுரல்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான இவர் கடலூர் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட இருந்த நிலையில் திடீரென கமலுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி அதிர்ச்சி அளித்தார். அக்கடிதத்தில் கட்சியில் உட்கட்சிப் பூசல் அதிகம் இருப்பதாகவும், அதை சகித்துக்கொண்டு அரசியலில் நீடித்து தனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

சம்பவம் நடந்து சரியாக ஆறு மாதங்கள் ஆன நிலையில் இன்று திடீரென்று ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்துக்கு வந்து கமலைச் சந்தித்த அவர் தன்னை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொண்டார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர்,...ஒரு சாலையின் முடிவுக்கு வந்துவிட்டோம் என்று நெருங்கிப்போய்ப்பார்த்தால் அங்கிருந்து வளைந்து இன்னொரு பாதை தென்படுகிறது. வீட்டுக்கு மீண்டும் திரும்பியதில் மகிழ்ச்சி...என்று பதிவிட்டிருக்கிறார்.