பிரபல ஃபைனான்சியரின் மகனை ஹீரோவாக வைத்துப்படம் எடுப்பதாகச் சொல்லி ஏமாற்றியதாக இயக்குநர் மிஷ்கின் அம்பலமாகியுள்ள நிலையில் இயக்குநர் சுசீந்திரன் தன் வாழ்க்கையைக் கெடுத்துவிட்டதாக பிரபல ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி புகார் தெரிவித்துள்ளார்.

பிரபல ஒளிப்பதிவாளரான நட்டி என்கிற  நட்ராஜ், ’மிளகாய்’, ’சதுரங்க வேட்டை’, ’எங்கிட்ட மோததே’, ’போங்கு’ ஆகிய படங்களில் நடித்து  நடிகராகவும் பிரபலமானார். தற்போது ‘சண்டி முனி’ படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக மனிஷா யாதவ் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில், என் வாழ்க்கையில் ’ஜீவா’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினதுதான் எனக்கு ஏற்பட்ட சறுக்கலுக்கு காரணம். இயக்குனர் சுசீந்திரனும், அவரது மேனேஜர் ஆண்டனியும் என்னை ஏமாற்றி விட்டார்கள்’ என்று பதிவு செய்திருக்கிறார்.

ட்விட்டரில் ஒரு வரியில் மட்டுமே இப்பதிவை வெளியிட்டார். விரிவான காரணங்களை விசாரித்தபோது, நட்டியை ஒரு பாடலுக்கு ஆடச்சொன்ன சுசீந்திரன் தனது அடுத்த படத்தில் அவரை சோலோ ஹீரோவாக வைத்து படம் தயாரிப்பதாக ஆசைகாட்டி மோசம் செய்திருப்பது தெரியவந்திருகிறது.

தற்போது அடுத்தடுத்து தொடர்ந்து மூன்று படங்களுக்கு பூஜைபோட்டிருக்கும் சுசீந்திரன் எந்தப் படத்திற்கும் நட்டியை அழைக்கவில்லை என்பதாலேயே சுசீந்திரன் தன் கழுத்தை அறுத்துவிட்டதாகக் கதறுகிறார்.