ராஜராஜ சோழனை பற்றி பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் வகையில் பேசியதாக திரைப்பட இயக்குநர் ப.ரஞ்சித் மீது புதுக்கோட்டை நகரக் காவல் நிலையத்தில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

ராஜராஜசோழனை இழிவாக இயக்குநர் ப.ரஞ்சித் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் அவர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த அமைப்பின் மாவட்டத் தலைவர் கார்த்திக், இளைஞரணிச் செயலர் குபேந்திரன் ஆகியோர் ப.ரஞ்சித் மீது அளித்துள்ள புகாரில், ‘தஞ்சையில் கடந்த ஜூன் 5 ஆம் தேதி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய திரைப்பட இயக்குநர் ப.ரஞ்சித் மன்னர் ராஜராஜசோழன் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும், ஜாதிகளுக்கு இடையே மோதலை உருவாக்கும் வகையிலும், பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் வகையிலும், இந்து மத நம்பிக்கையை இழிவுபடுத்தும் வகையிலும் பேசியுள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது. 

அதேபோல் சென்னையிலும் ப.ரஞ்சித் மீது புகாரளிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருநின்றவூரைச் சேர்ந்தவர், கலைச்செல்வி. தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவரான அவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ளார். அதில், தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாளில் நடந்த, நினைவு நாள் கூட்டம் ஒன்றில், திரைப்பட இயக்குனர், ரஞ்சித் சர்ச்சைக்குரிய விதமாக பேசி உள்ளார். 

தொடர்ந்து, ஜாதி, மதம், இனம், மொழி, பண்பாடு மற்றும் கலாசாரத்தை சீர்குலைக்கும் வகையிலும் பேசி வருகிறார். சுயவிளம்பரம் தேடுவதற்காக, மன்னர் ராஜராஜனின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் கற்பித்து வருகிறார். அவரது பேச்சு, தமிழகத்தில், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் உள்ளது.

ஜாதி, மதம், இனம், மொழி அடிப்படையில் இழிவுப்படுத்தி பேசி, மோதல்களை உருவாக்க முயற்சிக்கும், ப.ரஞ்சித்தின் செயல் கண்டிக்கத்தக்கது. அவரை, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ், கைது செய்ய வேண்டும்’ என வலியுறுத்தி இருக்கிறார். இன்னும் பலர் ஆங்காங்கே ப.ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்ய தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.