நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ள நிலையில் பொதுக்குழுவை சிலவாரங்கள் தள்ளிவைத்து முறைப்படி நடத்தலாம் என நாசர் தரப்பு சொல்ல விஷால் தரப்பு பிடிவாதமாக இன்றே நடத்த வேண்டும் என்று முனைப்பு காட்டுவதால் நாசர் சங்கடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
நடிகர் சங்க விவகாரத்தில் ஆரம்பம் முதலே விஷால் தரப்பு எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்படுவதால் நடிகர் சங்க செயல்பாடுகள் அனைவர் மத்தியில் அதிருப்தியை கிளப்பி உள்ளது. நடிகர் சங்க முடிவுகளை பெரும்பாலும் விஷாலும் கார்த்தியுமே எடுப்பதால் மற்றவர்கள் அதிருப்தியிலுள்ளனர்.

விஷால் ஒரு படி மேலே சென்று தயாரிப்பாளர் சங்கத்தினரை வம்பிழுத்து சஸ்பெண்ட் ஆன விவகாரமும் , நடிகர் சங்க கட்டட கட்டும் விவகாரம் இழுத்தடித்து செல்வதிலும் , விஷாலின் தனிப்பட்ட ஸ்டண்டுகளையும் யாரும் ரசிக்கவில்லை.
ஆரம்பத்தில் ராதாரவி , சரத்குமார் போட்டியை சமாளிக்க ரித்தீஷ் உதவியை நாடிய விஷால் டீம் பின்னர் ரித்தீஷிடம் அலட்சியம் காட்ட அதுவே ரித்தீஷ் விலக காரணமாக அமைந்தது. தற்போது பொதுக்குழு முதன்முறையாக கூட்டப்படுகிறது அதில் பிரச்சனை இல்லாமல் நடத்த வேண்டும் என நாசர் தரப்பு விரும்புகிறது.
ஆனால் என்ன ஆனாலும் பொதுக்குழுவை நடத்தியே தீருவோம் என விஷால் தரப்பு பிடிவாதம் பிடிக்க பெரும் குழப்பத்திலும் பதற்றத்திலும் இன்றைய பொதுக்குழு நடக்க உள்ளது.
பொதுவாக பொதுக்குழு கூட்டம் இடம் , நாள் மாற்றி அமைக்கப்பட்டாலும் முறைப்படி அதற்குரிய கமிட்டியை கூட்டி மீண்டும் அனுமதி பெற வேண்டும் ஆனால் லயோலா கல்லூரி அனுமதி மறுப்பு , வழக்கு என பல்வேறு பிரச்சனை காரணமாக நடிகர் சங்க வளாகத்தில் நடத்த போலீசிடம் அனுமதி கேட்டனர்.

ஆனால் அங்கு நடத்தவும் போலீசார் முறைப்படி அனுமதி அளிக்கவில்லை. பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்க முடியாது என தெரிவித்து விட்டனர். இதனால் நாசர் தரப்பில் இப்படி அவசர அவசரமாக நடத்துவதை விட கூட்டத்தை தள்ளிவைத்து பிறகு நடத்தலாமே என்று கூறப்பட்டதாகவும் ஆனால் விஷால் தரப்பினர் இதை கவுரவ பிரச்சனையாக எடுத்து நடத்தி வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது.
இதனால் நாசர் தரப்பு சங்கடத்துக்குள்ளாகி உள்ளதாக கூறப்படுகிறது. பொதுக்குழு நேரமோ , இடமோ மாற்றப்பட்டால் சொசைட்டி விதிப்படி முறைப்படி கூட்டத்தை கூட்டி முடிவெடுத்து 21 நாட்கள் கழித்துதான் நடத்த வேண்டும், ஆனால் விஷால் தர்ப்பினர் சிறுபிள்ளைகள் போல் செயல்படுகின்றனர், இது அனைத்தையும் அறிந்த நாசருக்கு தெரியாதா என்று ஒரு சாரர் கேட்கின்றனர்.
அனைத்தையும் தடுக்கவும் முடியாமல் , கருத்தும் சொல்ல முடியாமல் எதிர்க்கவும் முடியாமல் நாசர் மவுனமாக இருப்பதாக ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
