’ஊடகங்களில் அவ்வளவு அவமானப்பட்ட பின்னரும் கூட நாசர் வறுமையில் வாடும் தன் பெற்றோரை சந்திக்கவரவில்லை. இப்படிப்பட்ட கல்நெஞ்சக்காரர் யாரையாவது இதற்கு முன் பார்த்ததுண்டா?’ என்றும் மீண்டும் கொந்தளிக்கிறார் நடிகர் நாசரின் தம்பி ஜவஹர்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இதே ஜவஹர் அளித்த பேட்டிக்கு சாமர்த்தியமாக பதிலளித்திருந்த நாசர்,’பல விஷயங்கள் மறைக்கப்பட்டு, நடந்த சில விஷயங்கள் திரிக்கப்பட்டு, வலு சேர்க்க சிலவற்றை புனையப்பட்டு, இச்சகதி எங்கள் மேல் வீசப்பட்டிருக்கிறது.வேட்பாளர் ஒருவர் மீது சுமத்துவதற்கு பழி ஒன்றும் கிடைக்காத போது வீசப்பட்ட சகதி எங்கள் பொது வாழ்க்கைக்கு கிடைத்த பரிசென்றே கருதுகிறேன். தேர்தலை முன் வைத்து வீசப்பட்ட இச்சகதி தேர்தல் வரை எங்களே மீதே கிடந்து நாறட்டும். என்ன நடந்தது என்று சொல்ல வேண்டிய கட்டாயத்தை நான் உணரவே செய்கிறேன்.

தேர்தல் நிறைவுறட்டும், நான் கமீலாவும் வேறு கிரகத்திற்கு பறந்து செல்லப் போவதில்லை. எதிர்கொள்ள தின்மையும் இருக்கிறது. தெளிவும் இருக்கிறது. இப்போதைக்கு இவ்வளவே''.என்றார்.

ஆனால் இன்று வரை நாசரோ அவரது மனைவியோ மீடியாவைச் சந்திக்கவில்லை. இந்நிலையில் இன்று பத்திரிகையாளர்களை மீண்டும் சந்தித்த ஜவஹர்,’ இன்னும் நாசரின் மனசாட்சி வேலை செய்யவில்லை. என் தாயும் தந்தையும் இன்னும் அதிகபட்சம் 5 அல்லது 6 ஆண்டுகளே உயிரோடு இருப்பார்கள். இன்னும் கூட வந்து பார்க்கும் மனம் அவருக்கு இல்லை.கல்நெஞ்சம் கொண்டவர்களால் கூட பெற்றோர் விசயத்தில் இப்படி இருக்கமுடியுமா என்பது தெரியவில்லை’என்று குமுறினார்.