போனிகபூர் தயாரிப்பில் அஜீத் அடுத்து நடிக்கவிருக்கும் ‘பிங்க்’ ரீமேக்கிலிருந்து நடிகை நஸ்ரியா வெளியேறியதற்கான காரணம், அவர் வித்யா பாலனுக்கு இணையான சம்பளம் கேட்டதுதான் என்று கூறப்படுகிறது.

‘பிங்க்’ படம் குறித்த அதிகாரபூர்வமான தகவல்கள் வரத்துவங்கிய நாள் முதலே நடிகை டாப்ஸியின் பாத்திரத்தில் நஸ்ரியாதான் நடிக்கவிருக்கிறார் என்ற தகவலும் தொடர்ந்துகொண்டே இருந்தது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு நஸ்ரியா பாத்திரத்தில், அதாவது டாப்ஸியின் பாத்திரத்தில் இந்தி நடிகை ஸ்ரத்தா நடிப்பதாக ஊர்ஜிதமான தகவல்கள் வந்தன.

அதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், தான் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கும் ஷ்ரத்தாவுக்கு தப்ஸி வாழ்த்து தெரிவித்துள்ளார். “குட் லக். எனக்கு முக்கியமான படமாக இது அமைந்தது போல் உங்களுக்கும் முக்கியமான படமாக அமையும் என நம்புகிறேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த திடீர் மாற்றம் குறித்து விசாரித்தபோது, நடிகை வித்யாபாலன் பாத்திரம் உள்ளே புகுத்தப்பட்டுள்ளதால் இந்தியில் இருந்த முக்கியத்துவம் தனது கேரக்டருக்கு இருக்காது என்பதாகத் தெளிவாகப் புரிந்துகொண்ட நஸ்ரியா, வித்யா பாலனுக்குக் கொடுக்கக் கூடிய அதே சம்பளத்தை தனக்கும் கொடுத்தால் மட்டுமே தன்னால் படத்தில் நடிக்கமுடியும் என்று வேலைக்கு ஆகாத ஒரு காரணத்தைச் சொல்லி விலகிக்கொண்டாராம்.