இயக்குநராக மட்டுமல்லாது நடிகராகவும் அவதாரம் எடுத்து அசத்திவரும் அமீர், யோகி, வடசென்னை போன்ற படங்களில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். அதிலும், வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தில் அவர் ஏற்று நடித்த ராஜன் கேரக்டர், ரசிகர்களால் கொண்டாடப்பட்டது எனலாம்.

இந்தப் படத்தை தொடர்ந்து, அமீர் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்துக்கு நாற்காலி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில், அவருக்கு அரசியல்வாதி கேரக்டராம். முகவரி, தொட்டி ஜெயா உள்ளிட்ட படங்களை இயக்கிய வி.இசட். துரை, நாற்காலி படத்தை இயக்குகிறார். 

அவர் இயக்கத்தில், சுந்தர் சி நடிப்பில் உருவாகியுள்ள இருட்டு படம் நாளை (டிசம்பர் 6) ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம் பாவா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அஜயன் பாலா வசனம் எழுத, ஒளிப்பதிவை கிருஷ்ணசாமி கவனிக்கிறார். 

கடந்த டிசம்பர் 2ம் தேதி நாற்காலி படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டு அசரடித்தது. இடது கையில் கட்டை விரலைத் தவிர மற்ற விரல்களில் மோதிரம் அணிந்தபடி, ஜனங்களைப் பார்த்து கையெடுத்து கும்பிடுவது போன்று அமீர் மாஸ் காட்டியிருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்லவரவேற்பை பெற்றது. 

தற்போது, நாற்காலி படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதன் முதல் நாள் படப்பிடிப்பை தனுஷின் ஆஸ்தான இயக்குநர்கள் வெற்றிமாறன், சுப்பிரமணியம் சிவா ஆகியோர் கிளாப் அடித்து தொடங்கிவைத்துள்ளனர். இந்த புகைப்படங்கள், தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளன. 

இதனை, இயக்குநர் சுப்பிரமணியம் சிவா, தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, நாற்காலி படக்குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். திரையுலக பிரச்னைகள் மட்டுமல்லாது, அரசியல் மற்றும் சமூக பிரச்னைகளுக்கும் குரல் கொடுக்கும் அமீர், நாற்காலி படத்தில் அரசியல்வாதியாக நடிப்பது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.